மூடி முத்திரை வைத்த கடைகளை மீண்டும் திறப்பதற்கு ரூபாய்.5 லட்சம் லஞ்சம் வாங்கிய டெல்லி அரசு அலுவலர் கைது. அவரது வீட்டிலிருந்து ரூபாய்.3.79 கோடி ரொக்கப் பணத்தை CBI அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
டெல்லி நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத்தின் (TUSIP) சட்டத் துறை அலுவலராகப் பணியாற்றி வருபவர் விஜய் மேகோ. டெல்லியில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வரும் கரண் குப்தா என்பவருக்கு டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் மினிஸ்ட்ரி ஆஃப் கேக்ஸ், ஸ்ரீ சன்வாரியா ஸ்வீட்ஸ் என்ற இரண்டு கடைகள் இருப்பதாகவும், அந்த கடைகளுக்கு வீட்டு வசதி மேம்பாட்டு வாரிய அலுவலர்கள் சீல் வைத்து விட்டதாகவும் விஜய் மேகோவிடம் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சட்டவிரோதக் கட்டிடம் குறித்து பிரச்சினை தொடர்பாக அந்தக் கடைகளுக்கு மூடி முத்திரை வைக்கப்பட்டதாக கரண் குப்தா தெரிவித்தார்.
சீல் வைக்கப்பட்டுள்ள அவரது இரண்டு கடைகளை திறப்பதற்கும், தங்கு தடையின்றி கடைகளில் வியாபாரம் நடத்துவதற்கும் உதவ வேண்டும் என்றும் விஜய் மேகோவிடம், கரண் குப்தா கேட்டுக் கொண்டதையடுத்து, கடைகளைத் திறக்க ரூபாய்.40 லட்சம் லஞ்சமாகத் தரவேண்டும் என்று விஜய் மேகோ கேட்டுள்ளார். இந்தப் பணத்தில் டியுஎஸ்ஐபியை சேர்ந்த மற்றொரு அலுவலருக்கும் பங்கு தரவேண்டுமென்றும் கரண் குப்தாவிடம் விஜய் மேகோ கூறியுள்ளார்.
அதையடுத்து, பணம் கொடுக்க விருப்பம் இல்லாத நிலையில் CBI அலுவலகத்தில் கரண் குப்தா புகார் செய்தார். சிபிஐ அலுவலர்கள் கரண் குப்தா கொண்டுவந்து கொடுத்த ரூபாய்.5 லட்சத்தை உரிய வழியாக வேதியியல் மாற்றம் செய்து திருப்பிக் கொடுத்ததை டியுஎஸ்ஐபி அலுவலர் விஜய் மேகோவிடம் தருமாறு ஆலோசனை கூறியுள்ளனர்.
CBI அலுவலர்கள் அறிவுறுத்தலின் படி, கரண் குப்தா ரூபாய்.5 லட்சத்தை விஜய் மேகோவிடம் வழங்கியபோது மறைந்திருந்த CBI அலுவலர்கள் அவரை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் CBI அலுவலர்கள் தீவிரமாக சோதனை நடத்தினர். அவரது வீட்டில் பல்வேறு இடங்களில் கட்டுக் கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் கைப்பற்றப்பட்டது.மொத்தம் ரூபாய்.3.79 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அலுவலர்கள் கூறினர். விஜய் மேகோ மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரிலான வீடு, நிலம் உள்ளிட்ட சொத்து ஆவணங்களையும் அங்கிருந்து பறிமுதல் செய்துள்ளனர். என CBI வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்