மைனர் பெண்ணை கொடுமைப்படுத்திக் கொலை செய்தவர்கள் கைது.
வீட்டு வேலைக்கு சேர்க்கப்பட்ட சிறுமியை கொலை செய்த பிறகு நாடகமாடிய குடும்ப உறுப்பினர்கள் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை அமைந்தகரை அடுக்குமாடிக் குடியிருப்பில் அமைந்த ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்ய சட்ட விரோதமாகச் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு, அந்த வீட்டின் உரிமையாளர் குடும்பம் தொடர்ந்து சித்ரவதை செய்ததும், கொடூரமாக கொலை செய்தது தொடர்பாக, வீட்டு உரிமையாளர், அவரது மனைவி, உறவினர்கள் என, 6 பேர் போக்சோ வழக்கில் கைது
. சென்னை அமைந்தகரை, சதாசிவம் மேத்தா சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் முகமது நவாஸ், வயது 40. இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். அவரது மனைவி நாசியா, வயது 30. இவர்கள் குடும்பத்தில் வீட்டு வேலை செய்ய 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதஞ்சாவூரைச் சேர்ந்த, 15 வயது சிறுமி வேலைக்கு சேர்க்கப்பட்டு நவாஸ் வீட்டிலேயே தங்கி வீட்டு வேலை செய்து வந்தார்.
தீபாவளி அன்று, குளிப்பதற்காகச் சென்ற சிறுமி, நீண்ட நேரமாக வெளியில் வராமல் இருந்ததாகவும், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சிறுமி இறந்த நிலையில் இருந்ததாகவும், இதுகுறித்து, வீட்டு உரிமையாளர் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை. இந்தச் சம்பவம் நடந்த ஒருநாள் கடந்த பின்னர், நவம்பர் 1ஆம் தேதி அமைந்தகரை காவல் நிலையத்துக்கு, தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இடத்திற்குச் சென்று பார்த்த காவலர்கள், தாமதமாக தகவல் தந்ததாலும், சிறுமியின் உடல் முழுதும் சிகரெட்டால் சூடு போட்டது போன்ற காயங்கள் இருந்ததாலும், சந்தேக மரணம் என, வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். உறவினர்கள் வாயிலாக சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து வந்து, முறையாகச் சம்பளம் கொடுக்காமல் இருந்தனர். தந்தை இல்லாத தாய் உள்ளிட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரையும் பார்க்க அந்தச் சிறுமியை அனுமதிக்க வில்லை. சிறுமிக்கு பல மாதம் பல வகையான ரீதியான துன்புறுத்தல்களும் தொடர்ந்துள்ளது. தீபாவளி நாளில் முகமது நவாஸ், அவரது மனைவி, நவாசின் நண்பர்கள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கியதில், சிறுமி மயங்கிய நிலையில் உயிரிழந்தது, விசாரணையில் தெரியவந்தது. கொலையை மூடி மறைக்க முயற்சி நடந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சந்தேக மரணம் வழக்கை, கொலை வழக்காக காவல் நிலையத்தில் மாற்றினர். போக்சோ சட்டமும் சேர்ந்த வழக்கு திருத்தப் பதிவும் செய்து, முகமது நவாஸ், அவரது மனைவி நாசியா, நவாசின் நண்பர் லோகேஷ், வயது 25, அவரது மனைவி ஜெயசக்தி, வயது 24, உறவினர் சீமா பேகம், வயது 29, மற்றொரு வீட்டில் வேலை செய்த மகேஸ்வரி, வயது 44 உள்ளிட்ட ஆறு நபர்களைக் கைது செய்தனர். கொலை செய்தது குறித்து நாசியா என்ற நபர் அளித்த வாக்குமூலத்தில்: கோயம்புத்தூர் தென்னம்பாளையத்தில், எங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போது, அங்கு வீட்டு வேலை செய்த சிறுமியின் தாயைச் சந்தித்தோம். அவரிடம் பேசி, எங்கள் குழந்தையை கவனித்து கொள்ள, ஒரு சிறுமியை எங்கள் வீட்டுக்கு அனுப்ப கேட்டு அழைத்து வந்ததாகவும், சிறுமியின் தந்தை இறந்து விட்ட நிலையில் ஒரு மகனுடன், அவரது தாயார் ஏழ்மை நிலையில் உள்ளதனால், சிறுமியை நாங்கள் அடிமையைப் போல நடத்தினோம்; போதிய சம்பளமும் நாங்கள் தரவில்லை. அவரது தாயைச் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. நான்கு மாதத்திற்கு முன் தான், சிறுமி பூப்பெய்தினார்.
அவர் சொந்த ஊருக்கு சென்றால், மீண்டும் வர மாட்டார் என்பதால் நாங்கள் அனுப்பவில்லை.என் கணவருக்கு தொடர்பு உள்ளது. இதனால், எங்களுக்குள் தினமும் தகராறு ஏற்படும். என் கணவரின் பார்வை சிறுமியின் பக்கம் திரும்பியது. அதில், எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஏதாவது காரணத்தை சொல்லி, சிறுமியை சித்ரவதை செய்ய துவங்கினேன்.
திருட்டு பட்டமும் கட்டி வந்தேன். சிறுமி மீது என் கணவருக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக, குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என, ஏதேதோ பொய் சொல்லி, அவருக்கும் ஆத்திரம் உருவாகச் செய்தேன்.என் கணவரின் நண்பர் லோகேஷ் மீது, விருதுநகர் மாவட்டத்தில் கொலை மற்றும் ஆயுதம் வைத்திருந்த வழக்கு உள்ளது. மனைவி ஜெயசக்தியுடன் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். லோகேஷ் முரட்டுத்தனமானர்.
அவரிடமும், சிறுமி மீது வெறுப்பு ஏற்படும் வகையில், பொய் கதைகளை சொல்லி வந்தேன். ஒரு முறை லோகேஷ், ஜெயசக்தி ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வந்த போது, அவர்கள் எடுத்து வந்த பொருள் ஒன்று தொலைந்து விட்டதாக கூறினர். இது தான் சமயம் என, அந்தப் பொருளை சிறுமி தான் திருடி இருப்பார் எனக் கூறினேன். என்னுடன் சேர்ந்து, அவர்களும் சிறுமியைத் திட்டினர். தேடிப்பார்த்த போது அந்த பொருள் மேஜைக்கு கீழே கிடந்தது. சிறுமி எந்த வேலை செய்தாலும், குறை சொல்லித் திட்டுவேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். விசாரணை முடிவில் தான் இன்னும் சில விபரங்களை அறிய முடியும், இதில் மைனர் பெண்ணை வேலைக்கு அமர்த்தியவர்கள் மட்டும் குற்றவாளிகள் எனக் கருதுவதை விட வேலைக்கு அனுப்பி வைத்த நபர்களும் குற்றமிளைத்தவர்கள் தான்.
கருத்துகள்