திண்டுக்கல் நகரில் சிட்டி எலும்பு முறிவுகள் தடுப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில்
4 வயது பெண் குழந்தை உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்ததாக மாநிலத்தின் சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
மருத்துவமனையில் தீ தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததே உயிரிழப்புக்குக் காரணமென பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு திண்டுக்கல் நகரிலுள்ள சிட்டி எலும்பு முறிவு தடுப்பு மருத்துவமனையின் முதல் தளத்தில் நேற்றிரவு 9 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நான்கு தளங்கள் உள்ள மருத்துவமனையில் மூன்று தளங்களுக்கு தீ பரவி தீவிரமாக எரிந்தது. மேலும் தீ பரவியதால் மருத்துவமனையின் உள்ளே சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் வெளியேற முடியாமல் பலமாகக் கத்திக் குரல் எழுப்பினர். தகவல் கிடைத்து வந்த தீயணைப்புத்துறையினர் மருத்துவமனைக்குள் சிக்கியிருந்த நோயாளிகள் மற்றும் உறவினர்களை துரிதமாக வெளியேற்றினர்.
அதில் 32 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சிகிச்சைக்காக உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திண்டுக்கல் - திருச்சிராப்பள்ளி சாலை முழுவதும் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் காட்சி தான். தீ விபத்தில் சிறுமி உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த 6 நபரில் ஒருவர் தீயில் கருகிய நிலையில், ஐவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டும் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மருத்துவமனையில் தீ பரவியதும் மின் விநியோகம் தடைபட்டு லிப்ட் பாதியில் நின்றதால் உள்ளே இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் பரிதவித்துள்ளனர். மருத்துவமனையிலிருந்து அனைவரும் மீட்கப்பட்ட பிறகே லிப்டில் சிலர் சிக்கியிருப்பது தெரியவந்தது. அதன்பிறகு அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இதில், இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுருளி, அவரது மனைவி சுப்புலட்சுமி, தாடிக்கொம்பைச் சேர்ந்த மாரியம்மாள், அவரது மகன் மணி முருகன், என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் ஒரு சிறுமி உட்பட 6 பேர் சடலமாகவே மீட்கப்பட்டனர். அதில், ஒருவர் தீயில் கருகி இறந்த நிலையில், ஐந்து பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் நோயாளிகளுடன் இருந்தவர்கள் மற்றும் நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் இதற்கிடையே, தனியார் மருத்துவமனையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி கூறினார். தீ விபத்து குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, பேரிடர் மேலாண்மை இயக்குநர் விசாகன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் தனியார் மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்தனர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி, தீ விபத்தில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 28 நபர்களிடம் சம்பவம் குறித்து கேட்டார். மேலும் அமைச்சர் சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரித்தனர்.தீ விபத்து தொடர்பாக மருத்துவமனை மேலாளர் உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். மருத்துவமனை கீழ் தளத்தில் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய முடியாமல் இருப்பதாகவும், வெப்பம் தணிந்த பின்னரே விசாரணை நடத்தி முழு உண்மை அறிய முடியுமென காவல்துறையினர் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினரின் முதல்கட்ட ஆய்வில் மருத்துவமனை வளாகத்தில் போதிய தீயணைப்புக் கட்டமைப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. தீ விபத்தினால் வெப்பம் அதிகரிப்பதை உடனடியாக தெரியப்படுத்தி அலாரத்தை இயக்கவும், மாற்று ஏற்பாடுகள் செய்யவும் உரிய கருவி இல்லாததே பெரிய விபத்திற்கு காரணம் எனத் தெரிவித்தனர். இந்தக் கருவிகள் இருந்திருந்தால் மருத்துவமனையின் எந்தப் பகுதியில் தீ பிடித்திருந்தாலும் அந்த நொடியிலேயே கவனித்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்திருக்க முடியுமென தீயணைப்புத்துறையினர் கூறினர்.
கருத்துகள்