மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
மற்றும் சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சு விரட்டும் சிறப்பாக நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 20 மாடுகளைப் பிடித்த பூவந்தி அபி சித்தன் சிறந்த மாடுபிடி வீரனாக அறிவிக்கப்பட்டவருக்கு அரசு சார்பில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவதாக சிறந்த மாடுபிடி வீரனாக பொதும்பு ஸ்ரீதருக்கு ஷேர் ஆட்டோவும். மூன்றாவது சிறந்த மாடுபிடி வீரனாக மடப்புரம் விக்னேஷும் அறிவிக்கப்பட்டனர். சேலம் பாகுபலி சகோதரர்களின் காளைமாட்டுக்கு முதல் பரிசாக (உழவூர்தி) டிராக்டருடன், பசுவும் கன்றும் வழங்கப்பட்டது. இரண்டாவதாக வந்த சிறந்த காளை மாட்டின் உரிமையாளர் எரக்கநாயக்கனூர் வக்கீல் பார்த்தசாரதிக்கு மோட்டார் சைக்கிளுடன் விவசாய இயந்திரமும் வழங்கப்பட்டது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இறுதிச்சுற்று பரபரப்பாக நடந்ததால் மக்கள் உற்சாகமாகவே கண்டுகளித்தார்கள்.
அபிசித்தன் 2024 ஆம் ஆண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 17 காளைகளை பிடித்த நிலையில், 18 காளைகளைப் பிடித்த வீரர் கார்த்திக்கிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது சர்ச்சையான போது விழாக்குழு மீதும் அமைச்சர் மூர்த்தி மீதும் அபிசித்தன் புகார் தெரிவித்தார். அதன் பின்னர் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடந்த முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகமாக காளைகளைப் பிடித்து முதல் பரிசு பெற்றார். அதோடு அரசு பொறுப்பிலில்லாத அமைச்சர் குடும்ப உறுப்பினரான ஒரு சிறுவருக்காக எதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எழுந்து நின்று கொண்டிருக்க வேண்டுமென? மக்கள் கேட்ட வினவிய நிலையில் பாஜகவினர் கேள்வி எழுப்பினர். அது குறித்து பாஜகவில் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை,
"மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்கச் செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம். முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அலுவலரை ஏன் அவமானப்படுத்துகிறார்கள்?
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்" எனக் கூறியிருந்தார். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான காணொளிகளைப் பகிர்ந்து விமர்சித்திருந்த நிலையில் விமர்சனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா பதிலளித்துள்ளார். அதாவது, "துணை முதல்வர் எழுந்து நின்றபோது விதிகளின் படியே நானும் எழுந்தேன். புகைப்படங்களில் திரித்துச் சொல்லப்படுகிறது" எனக் கூறியுள்ளார். இவரது கூற்றை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர், உதயநிதி, இன்பநிதி ஆகியோர் அமர்ந்தவாறு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிக்கும் புகைப்படமும் வெளியானது.
கருத்துகள்