ஆவணங்கள் திரும்ப வழங்காத ஸ்ரீ வில்லிபுத்தூர் வங்கிக்கு நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் அபராதம் விதித்தது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடனை திருப்பி செலுத்திய நிலையில், அடமானப் பத்திரம் மற்றும் ஆவணங்களை திரும்ப வழங்காத வாங்கிக் கிளை, பாதிக்கப்பட்ட நபருக்கு ரூபாய்.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட நுகா்வோா் குறைதீர் நீதிமன்றம் உத்தரவு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டம் தைலாகுளம் சிவசுப்பிரமணியனுடைய மனைவி கலைவாணி இராஜபாளையம் தாலுகா சேத்தூரில் செயல்படும் பொதுத் துறை வங்கிக் கிளையில் பால் பண்ணை வைக்க நில அடமானம் வைத்து ரூபாய்.5.25 லட்சம் கடன் பெற்றதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் ஒரே தவணையாக கடனை திருப்பிச் செலுத்தியுள்ளார். பின்னர், அதற்கான சான்றிதழையும் பெற்றுள்ள நிலையில், கலைவாணி உயிரிழந்து போனார் இதில் அடமானம் வைத்த நிலத்தின் பத்திரத்தை திருப்பித்தரக் கேட்டு, சிவசுப்பிரமணியன் மற்றும் அவரது பிள்ளைகள் வங்கியில் விண்ணப்பித்தனா். ஆனால், பத்திரத்தை திரும்ப வழங்காமல் வங்கி ஊழியர்கள் சேவைக் குறைபாடாக அலைக்கழித்ததாகக் தெரிகிறது. அதன் காரணமாக சிவசுப்பிரமணியன் மற்றும் அவரது பிள்ளைகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள விருதுநகர் மாவட்ட நுகா்வோா் குறைதீா் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில் சம்மன் மற்றும் குறிப்பாணை அனுப்பியும், வங்கி தரப்பிலிருந்து யாரும் முன்னிலையாகவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மற்றும் உறுப்பினர்கள் பத்திரங்களை திரும்ப வழங்குவதுடன், புகாா்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய்.25 ஆயிரமும், வழக்குச் செலவுக்கு ரூபாய். பத்தாயிரம் என மொத்தம் ரூபாய்.35 ஆயிரம் வங்கி சாா்பில் வழங்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட நுகா்வோா் குறைதீர் நீதிமன்றத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி ஆகியோா் உத்தரவிட்டனா்.
கருத்துகள்