வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவள்ளூர் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் கைதான நாகராஜ் என்ற நபரின் உத்தரவை ரத்து
செய்யக்கோரி அவர் மனைவி கஜலெட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், நாகராஜை, ஏ ப்ளஸ் வகைக் குற்றவாளியாக வகைப்படுத்தியுள்ளதாகவும், அவர் மீது கொலை உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்து தாக்கல் செய்த அறிக்கையில், 2014, 2015, மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் உள்ளிட்ட பல வழக்குகள் இன்னும் புலன் விசாரணையில் நிலுவையில் இருப்பது தெரிந்தது. அதையடுத்து, புலன் விசாரணையை முடிப்பதற்கே பத்தாண்டுகளுக்கு மேலானால் விசாரணை முடிந்து குற்றவாளிக்கு எப்போது தண்டனை கிடைக்குமென தாங்கள் அஞ்சுவதாகத் தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள் புலன் விசாரணையை முடிக்க வேண்டுமென உத்தரவில் குறிப்பிட்டார். குற்ற வழக்குகள் முறையாகக் கையாளப்படுகிறதா? என்பது குறித்து நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களை காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் மாநிலத்தின் உள்துறைச் செயலாளர் கண்காணிக்க வேண்டுமெனவும், விசாரணை தாமதமாவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். சிக்கலான வழக்குகளை விசாரிக்கவும், வழக்குகளை விசாரிப்பதற்கு பயிற்சி அளிக்கவும் தாலுகா, மாவட்டம் மற்றும் மாநில அளவில் புலன் விசாரணைக்கென, பிரத்யேகக் குழு அமைப்பது மிகவும் முக்கியமானதெனவும் அரசு மற்றும் காவல் துறைத் தலைமை இயக்குனர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் பரிந்துரைத்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அதனை ஆய்வு செய்து விசாரணைக்கு எடுக்க விசாரணை நீதிமன்றம் எந்தவிதமான தாமதமும் செய்யக்கூடாதெனவும், தாமதமிருந்தால் அது குறித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அல்லது சென்னை உயர் நீதிமன்றத்திடம் முறையிடலாம் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். உரிய காரணங்களின்றி குற்ற வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி மாதம் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
கருத்துகள்