100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்” - தமிழ்நாடு அரசுக்கு பாமகவின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கோரிக்கை
தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு மாநில அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டுமென பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2024-25-ஆம் ஆண்டில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தியதில் 78 ஆயிரத்து 784 முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவற்றின் மூலம் ரூபாய்.14 கோடிக்கும் கூடுதலான தொகை கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூகத் தணிக்கை வாயிலாகத் தெரியவந்துள்ளதாக செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அப்பட்டமான முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்திருக்கும் போதிலும், அவற்றின் மீது தமிழ்நாடு அரசு இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தேசிய ஊரக வேலைத் திட்டத்தின்படி பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்பது தான் முதன்மைக் குற்றச்சாட்டாகும். லட்சக்கணக்கானோருக்கு அவர்கள் செய்த பணியின் அளவு அதிகரித்து காட்டப்பட்டு, பணம் வழங்கப்பட்டதாகக் கணக்குக் காட்டி சுருட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் கஞ்சிரங்கால் ஊராட்சியில் மட்டும் எந்த வேலையும் செய்யாத 37 பேருக்கு மொத்தம் ரூபாம். 8.25 லட்சம், அதாவது சராசரியாக ஒருவருக்கு ரூபாய்.22,297 வீதம் வழங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இத்தகைய மோசடிகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்ற இந்த மோசடிகள் குறித்த அனைத்து விவரங்களும் தமிழ்நாடு அரசிடம் உள்ளன. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் முறைகேடுகள் இல்லாமல் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகத் தான் சமூகத் தணிக்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் தெரியவரும் முறைகேடுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். ஆனால், தமிழ்நாடு அரசு இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததன் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களைப் பாதுகாக்க முயல்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்த முறைகேடுகளில் 6302 புகார்கள் மீது மட்டும் தான் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூபாய்.1.89 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இந்த மோசடிகளைச் செய்த ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் மீது இன்று வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் தான் இப்போதும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை களத்தில் செய்ல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் முறைகேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி போதுமானதாக இல்லை என்பதால், கடந்த சில மாதங்களாக பணி செய்த மக்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. உழைத்த மக்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படாத நிலையில், எந்த வேலையும் செய்யாதவர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட உன்னதத் திட்டமாகும். ஆனால், அது இன்றைய ஆட்சியாளர்களால் ஊழல் திட்டமாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தின் படி பணி செய்து இதுவரை ஊதியம் பெறாதவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதில் பொது நீதி யாதெனில் பல ஊர்களில் இறந்து அடக்கம் செய்யப்பட்ட பிரேதங்கள் கூட எழுந்து வந்து சம்பளம் வாங்கியது ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களிலும் குறைந்தது 25 நபர்கள் போலியான நபர்கள் சேர்க்கப்பட்டு கமிஷன் தொகை பிரித்துக்கொள்ளப்படுவதை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை நன்றாகவே அறியும் ஆனால் நடவடிக்கைகள் இல்லை என்பது தான் இதில் வேதனை மேலும் இந்த திட்டம் வந்த பின்னர் விவசாய வேலை செய்ய ஆட்கள் இல்லாமல் போனதும், இந்த வேலை செய்யும் இடத்தில் நடக்கும் கூத்தும் கும்மாளமும் ஊர்ப் புறணியும் அதிகம் சீரியல் கதைகளும் சினிமா கதைகள் மாத்திரமல்ல தண்டட்டி அடமானம் வைத்த கதை தடுமாற்றமான சிலரது வாழ்வியல் பேசும் களமாக உள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் ஒரு ஒழுங்கு முறைச் சட்டம் மூலம் சீரமைத்தால் ஒருவர் கூட வேலைக்கு வரமாட்டார்கள் என்பதே உண்மை. இதை தான் நம்நாடு திரைப்படப் பாடல் கூறுகிறது.. "தெருத் தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு...
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு....
வீடுக்கெல்லாம் வெளிச்சம் போடக் கொடுத்த பணத்திலே...
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் கிராம சபையிலே...
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்..... ஏய்பவர்க்கே காலமென்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே,...
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு!
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு.!
கருத்துகள்