நிதியைச் சேர்க்க நீதிக்கே வைக்கப்பட்ட 'தீ'-நீதிபதி குறித்து அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் கொதிப்பு.
டில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தில் கொலிஜியம் முடிவு செய்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா. நேற்று, அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் உடனடியாக வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். ஆனால் அந்தக் கதை ஒரு பெரிய திருப்பத்தை எடுத்து இன்னும் பெரிய தீயை மூட்டுகிறது - அவரது அறைகளில் ஒன்றில் பணம் நிறைந்திருப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர். அதன்பேரில், தீயை அணைக்க வந்த போது, நீதிபதியின் வீட்டில் உள்ள அறையில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அதனைப் பறிமுதல் செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் நீதித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பில் உள்ள 5 உறுப்பினர் நீதிபதிகளும் ஒருமனதாக திட்டமிட்டுள்ளனர். மேலும், டில்லியிலிருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு யஷ்வந்த் வர்மாவை பணியிட மாற்றம் செய்யவும் கொலிஜியம் முடிவு செய்துள்ளது.
ஆனால், அவரை ஏற்க முடியாது எனக்கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளையில், ஒரு சிலரோ, நீதித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்திய யஷ்வந்த் வர்மா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அவரை பதவி விலகவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்றம் என்ன குப்பைத் தொட்டியா என கேள்வி எழுப்பி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ரூபாம்.11 கோடி பணம் எரிந்துவிட்டதாகவும், இவை அனைத்துமே கணக்கில் வராத பணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து யஷ்வந்த் தனது பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தப்படலாம், அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என்றால் விரைவில் உள்விசாரணை தொடங்கி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும், விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நீதிபதி யஷ்வந்த் வர்மா
06.01.1969 ஆம் தேதியன்று அலகாபாத்தில் பிறந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பி.காம் [ஹானர்ஸ்] பட்டப்படிப்பை முடித்தார் மத்தியப் பிரதேசம் ரேவா பல்கலைக்கழகத்தால் எல்.எல்.பி பட்டம் பெற்றார், அதன் பிறகு 08.08.1992 ஆம் தேதியன்று வழக்கறிஞராக பணி செய்து வந்தார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக, அரசியலமைப்பு, தொழிலாளர் மற்றும் தொழில்துறை சட்டங்கள், கார்ப்பரேட் சட்டங்கள், வரிவிதிப்பு மற்றும் தொடர்புடைய சட்டக் கிளைகள் தொடர்பான விஷயங்களைக் கையாளும் பல்வேறு வழக்குகள் கையாண்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வு வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு ஆலோசகராகவே இருந்தார். 2012 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதம் 2013 ஆம் ஆண்டு வரை உத்தரபிரதேச மாநிலத்திற்கான தலைமை நிலை ஆலோசகராகப் பணியாற்றினார், பின்னர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
2014 அக்டோபர் 13 ஆம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 01, 2016 ஆம் நாளன்று கொலீஜியம் பரிந்துரை மூலம் அந்த நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றார். அக்டோபர் 11, 2021ஆம் தேதியன்று டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதில் பொது நீதி யாதெனில்: இவர் மீது நடத்தப்படும் விசாரணையில் நிரபராதிகளிளின் நீதி நிதியால் மறைக்கப்பட்டிருந்தால் இந்த நீதிமான் சிறைக்குச் செல்ல வேண்டியவரே. ஏழை நிரபராதிகளின் நீதி நிதியால் மறைக்கப்பட்டிருந்தால் இவர் தண்டனை பெறும் நாளில் தான் நீதி நிலைபெறும்.
கருத்துகள்