திருநெல்வேலி தைக்கா தெருவைச் சேர்ந்த ஜாகிர் உசேன் காவல்துறையில்
உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தன் வீடருகே உள்ள மசூதிக்கு தொழுகைக்காக மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஜாகிர் உசேனை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிப் படு கொலை செய்தனர். காட்சி மண்டபம் அருகே ஓய்வு பெற்ற காவல் பணி சார்பு ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நகரக் காவல் முன்னாள் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் தனிப்பிரிவு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி (வயது 60). திருநெல்வேலியில் 18-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட கார்த்திக், அக்பர்ஷா ஆகிய இருவர் திருநெல்வேலி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முகமது தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி நேற்று புதன்கிழமை கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திருநெல்வேலி நகர் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து திருநெல்வேலி நகர் சரக முன்னாள் காவல் உதவி ஆணையரும், தற்போது கோயம்புத்தூர் மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையருமான செந்தில்குமார் என்பவர் பணியிடை நீக்கம் செய்து காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள முகமது தவுபிக்கின் மனைவி நூருன்னிஷாவை தனிப்படைக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள். அவர் திருவனந்தபுரத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதை அடுத்து தனிப்படைக் காவல்துறையினர் திருவனந்தபுரத்துக்கு விரைந்துள்ளதாகத் தெரிகிறது.கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஜாகிர் உசேன் ஒரு வீடியோ வெளியிட்டதில் அவர், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு வணக்கம். தமிழ்நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக ஒரு மூலையில் நானும் இருக்கிறேன். என்னால் முடிந்த நல்லறங்களைச் செய்து கொண்டிருக்கிறேன். மரணிக்கும் நேரத்தில் நல்ல காரியம் செய்வதற்காக திருநெல்வேலி டவுன், தொட்டிப்பாளையம் தெருவிலிருந்து நன்மையான பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறேன்.
இதை நான் சொல்ல வேண்டாம். அந்தப் பகுதியில் வக்ஃபு இடத்துக்கு பாத்தியப்படாதவர்களைக் கேட்டால் அந்த மக்களே சொல்வார்கள். நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதல்ல. விசாரணை செய்யுங்கள். விசாரிக்க எல்லாம் செய்ய மாட்டீர்கள். அதற்கெல்லாம் உங்களுக்கு நேரமில்லை. ஒருவர்.. இருவர் இல்லை.. ஒரு கும்பலே சேர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறது.என்னை கொலை செய்ய 20 முதல் 30 பேர் வரை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமான நபர் தெளஃபிக். இந்தக் கொலைக்கு மிக முக்கியக் காரணம் திருநெல்வேலி டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையாளர் செந்தில் குமார் ஆகிய இருவரும் தான் இந்தக் கொலையை ஊக்குவிக்கிறார்கள். நான் கொடுக்கும் புகார்களை எல்லாம் ஒன்று சேர்ப்பதே இந்த இரண்டு பேர் தான்.
தௌஃபிக் என்பவர் தன் பெயரை கிருஷ்ணமூர்த்தி என்று சொல்லி சிவில் பிரச்னையில் என் மீது போலி புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் என் மீதும், என் மனைவி மீதும் பிசிஆர் வழக்குப் போட்டுள்ளனர். இப்போது எனக்கு கொலை மிரட்டல், பயந்து ஓடி கொண்டிருக்கிறேன். சாகப் போகிற நான் என்ன வேண்டுமானாலும் பேசலாம். எப்படியும் கொன்று விடுவார்கள் என்று தெரியும்." என்று கூறியுள்ளார்.
திருநெல்வேலி ஓய்வு காவல் சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு குறித்து முதல்வர் சட்டமன்றத்தில் பேசும்போது வக்ஃபு இடப்பிரச்சனை தொடர்பாக முகமது தவுபிக் மற்றும் ஜாகீர் உசேன் ஆகியோர் இருவரும் மீது மாறி மாறி புகார் மனுக்கள் அளித்துள்ளனர் அதன் மீது காவல்துறை CSR பதிவு செய்துள்ளது தற்போது அந்த CSRன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால் CSR போட்டவுடன் FIR பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் கொலை தடுக்கப்பட்டிருக்கும். தான் கொலை செய்யப்பட்டு விடுவேன் என்று ஒரு முன்னாள் காவல்துறை சார்பு ஆய்வாளராக இருந்தவர் முதலமைச்சர் பிரிவில் இருந்தவர் காணொளி பதிவிட்டு இருக்கிறார். ஆனால் வெறும் சி.எஸ்.ஆர் மட்டும் தான் பதிவு செய்துள்ள நிலையில்,கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை சம்பவமே அரங்கேறி இருக்காது.
இதில் மட்டுமல்ல பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளி அடையாளப்படுத்தப்பட்ட பிறகு தான் FIR பதிவு செய்கிறார்கள். இதற்கு முன்பு எல்லாம் அப்படி இல்லை FIR பதிவு செய்து புலன்விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டறிவார்கள். ஆனால் தற்போது குற்ற வழக்குகளின் புள்ளி விவரங்களை குறைத்து கணக்கு காட்டுவதற்கு காவல்துறை பெரும்பாலான வழக்குகளில் FIR பதிவு செய்வதில்லை. என ஒரு தவறான முன்னுதாரணத்தை அரசு ஏற்படுத்துகிறதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே சி.பழனிச்சாமி தெரிவித்தார்.
கருத்துகள்