2000 ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தாது மணல் முறைகேட்டில் ஈடுபட்டதாக 21 பேர் மீது CBI வழக்குப் பதிவு செய்தது. மேலும், 6 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தாது மணல் முறைகேடு சம்பந்தப்பட்ட 12 இடங்களில் CBI சோதனை - வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல ஆண்டுகளாக விதிகளுக்குப் புறம்பாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தது தொடர்பாக ஐஏஎஸ் உயர் அலுவலர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான தமிழ்நாடு அரசின் சிறப்புக் குழுவினர்
தாது மணல் குவாரிகளில் சோதனை நடத்தி, பெருமளவு முறைகேடு நடந்திருப்பதையும், அரசுக்கு ரூபாய்.5,832.29 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர்.
அதையடுத்து, தாது மணல் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், ஆலை உரிமையாளர்களுக்கு ரூபாய்.6 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து ஆலை உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை CBI விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிரான்ஸ் கார்னட் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள், வேல்முருகன், வைகுண்டராஜன், கார்த்தியாயினி, சுப்புராஜன், ரேணுகா , சுமனா, மதனா, ஜெகதீசன் செந்தில்ராஜன், ஊழியர்கள், அடையாளம் தெரியாத நபர்கள் என மொத்தம் 21 பேர் மற்றும் விவி மினரல்ஸ் தொடர்புடைய 6 நிறுவனங்கள் மீது CBI அலுவலர்கள் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்