சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு ஐஜி பொன்.மாணிக்கவேலுவை சிபிஐ விசாரிக்க தடை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
சிலைக்கடத்தலில் ஓய்வு பெற்ற காவல் துறை ஐ.ஜி. பொன் மாணிக்க வேலுக்கு எதிரான CBI விசாரணைக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பொன் மாணிக்கவேல். அவர் அதே பிரிவில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய காதர் பாட்ஷா மீது நடவடிக்கை எடுத்திருந்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காதர் பாட்ஷா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொன் மாணிக்கவேலுக்கு எதிரான CBI விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து காதர் பாட்ஷா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் – சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, “இந்த வழக்கில் CBI விசாரணை தொடர்ந்தாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும்” என பொன் மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்த போது அதற்கு நீதிபதிகள், ”உங்கள் மீது தவறில்லை என்றால், ஏன் குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கக் கோருகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர்.
”தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஒரு மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த உத்தரவை நீக்க வேண்டும்” என பொன் மாணிக்கவேல் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து பொன் மாணிக்க வேலுக்கு எதிரான CBI விசாரணையை நிறுத்தி வைத்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய பொன் மாணிக்கவேலின் மனுவை மெரிட் அடிப்படையில் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்துகள்