திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர் மற்றும் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் காவிரி தென்கரை 115 ஆவது சிவ ஸ்தலமாகும். திருத்துறைப்பூண்டி வட்டத்தில் திருக்கொள்ளிக்காடு அமைந்துள்ளது. திருக்கொள்ளிக்காட்டில் பிரபலமான பொங்கு சனீஸ்வரர் கோவிலுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திலுள்ளது அதன் செயல் அலுவலராக ஜோதி (வயது 40) பணி செய்கிறார். மன்னார்குடி ஒற்றைத்தெரு ஆனந்த விநாயகர் கோவிலில் கூடுதல் பணி செயல் அலுவலராகவும் பணியாற்றுகிறார். பொங்கு சனீஸ்வரர் கோவிலில் எழுத்தராக சசிகுமார்( வயது 50) பணியாற்றுகிறார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வுத் தொகை வழங்காமல் நிலுவைத்தொகை இருப்பதை வழங்கும்படி சசிகுமார், செயல் அலுவலர் ஜோதியிடம் கேட்டுள்ளார். அதன்படி ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டுமானால்.
ரூபாய்.1 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டுமென ஜோதி கேட்டுள்ளார் ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சசிகுமார் அது குறித்து திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்ததையடுத்து திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரிடம் பெற்ற பணத்தில் பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய 1 லட்சம் ரூபாய் நோட்டுகளை திரும்பக் கொடுத்து அதை செயல் அலுவலர் ஜோதியிடம் கேட்டால் வழங்கும் படி சசிகுமாரிடம் கூறினார்கள். அதன்படி நேற்று செயல் அலுவலர் ஜோதி, மன்னார்குடி ஒத்தைத் தெரு ஆனந்த விநாயகர் கோவிலில் பணியிலிருந்தபோது அவரிடம், இரசாயனப் பொடி தடவிய பணத்தை சசிகுமார் அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்தாராம்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையிலான குழுவினர் ஜோதியை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார்
கருத்துகள்