செண்பகவள்ளி தடுப்பணை உடைப்பை சரி செய்யக் கோரி ஜூலை மாதம் 10-ஆம் தேதி மாநாடு
தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தென்காசி மாவட்டம், சிவகிரியில் செண்பகவள்ளி தடுப்பணை வைப்பாறு பாசன விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம் சிவகிரி சிவகிரி விவசாய சங்கத் தலைவர் இரத்தினவேலு தலைமையில் சிறப்பாக நடந்தது. தென்மலை பாசனக் கமிட்டி செயலாளர் பாபுராஜ், பொருளாளர் குருசாமி, மாரிமுத்து, ராமசாமி முன்னிலையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.அர்ச்சுனன் சிறப்புரையாற்றினார். மேலும் கூட்டத்தில் இராயகிரி பிச்சாண்டி, பனையூர் பத்மநாபன், களஞ்சியம் பெண்கள் அமைப்பின் பொன்னுத்தாய், கூடலூர் சிவஞானபாண்டியன், ஊர்த் தலைவர் குருசாமி பாண்டியன், வடக்கு சத்திரம் தங்கவேலு ஆகியோர் பேசினர்.
சிவகிரி விக்னேஷ் ராஜா, தென்மலை முத்தரசு பாண்டியன், தெற்கு அரண்மனை பூமிநாதன், வெங்கடேசப் பண்ணையார், கலிங்கப்பட்டி ஒன்றியக் கவுன்சிலர் அருண்குமார் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தீர்மானங்களாக இராமமூர்த்தி முன்மொழிந்தார்.
அதில். தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் 1733-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட செண்பகவள்ளி தடுப்பணை எனும் கன்னியா மதகுக் கால்வாய் தடுப்புச் சுவர் 1,450 மீட்டர் நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்டது. அப்போதைய சிவகிரி ஜமீன்தாரும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னருக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி இத் தடுப்பணை கட்டப்பட்டதில் கன்னியா மதகுக் கால்வாயில் 1955- ஆம் ஆண்டில் ஏற்பட்ட திடீர் பெரு வெள்ளம் காரணமாக உடைப்பு ஏற்பட்ட நிலையில். 1959 -1962- ஆம் ஆண்டில் கர்ம வீரர் கு. காமராஜர் முதல்வராக இருந்த போது உடைப்பு சரி செய்யப்பட்டது.
பின்னர், 1964- ஆம் ஆண்டில் ஏற்பட்ட திடீர் பெரு வெள்ளத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதனைச் சரி செய்வதற்கு
கேரளா மாநிலத்தின்அரசும், வனத்துறையினரும் ஒத்துழைக்க மறுத்து விட்ட நிலையில். முன்னாள் முதல்வர் எம் ஜி.ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) முதல்வராக இருந்த போது உடைப்பை சரி செய்ய மதிப்பீட்டுத் தொகை ரூபாய்.10.30 லட்சத்தின் பாதித் தொகை ரூபாய்.5.15 லட்சம் காசோலையாக 1985- ஆம் ஆண்டில் கேரளா மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 20 ஆண்டுகளாகியும் உடைப்பை சரி செய்ய எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் 2005-ஆம் ஆண்டில் இருபது ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அரசு வழங்கிய காசோலையை கேரளா மாநில அரசு திருப்பி அனுப்பியது.
அது தொடர்பாக ராசிங்கப்பேரி கண்மாய் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் எட்டு வார காலத்துக்குள் உடைப்பை சரி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, 20 ஆண்டுகள் கடந்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வறண்டு போயுள்ளதாகவும. செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரி செய்யக் கோரி ஜூலை மாதம் 10-ஆம் தேதியில் தென்மலை கிராமத்தில் பத்தாயிரம் விவசாயிகள் பங்கேற்கும் எழுச்சி மாநாட்டை நடத்துவதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்காக ஒருங்கிணைப்புக் குழு உருவாக்குவது, ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி குறைந்தது 10 கிராமசபைகளிலாவது தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவது. தமிழ்நாட்டில் முதல்வர் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கையை நேரில் வலியுறுத்துவது, மேலும் அதற்குறிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதெனவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. நிறைவாக தென்மலை பாசன கமிட்டி தலைவர் காளி முத்து நன்றி தெரிவித்தார்.செண்பகவள்ளி அணை இந்தியாவின் கேரளா மாநில எல்லைக்குள் அமைந்த தடுப்பணை தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் 26 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 36,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்துள்ளது. சொக்கம்பட்டி குன்றின் அடிவாரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள இந்த அணையைக் கட்ட வித்திட்டவர் சிவகிரி ஜமீன்தார் வரகுண சங்கர பாண்டியன். 1873 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் தர்மராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் பேசி ஒப்பந்தம் ஏற்பட்டதன் கால அணை கட்டினார்.
அணையிலிருந்து வரும் தண்ணீர் வாசுதேவநல்லூர் தலையணையை அடைந்து அங்கிருந்து இராசிங்கபேரி குலசேகர ஆழ்வார் ஆகிய இரண்டு கால்வாய்கள் மூலம் வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம், கோவில்பட்டி வரை உள்ள பகுதிகளில் தண்ணீர் செல்லும். இந்த நிலையில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யாமல் உள்ளது அதன் காரணமாக செண்பகவள்ளி அணை மீட்புக் குழுவினர் பலவிதமான சட்டப்போராட்டங்களையும், அறப்போராட்டங்களையும்ம் நடத்துகின்றனர். செண்பகவள்ளி தடுப்பணையின் அணை உடைப்பைச் சரிசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் இன்னும் உடைப்பு சரி செய்யப்படாமலேயே உள்ளது.
கருத்துகள்