தமிழ்நாட்டில் 2025-26 ஆம் கல்வி ஆண்டின் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பம் செய்த மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே ரேண்டம் எண் வெளியிடப்பட்டதையடுத்து
தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டார். அதில் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு. இந்த தரவரிசைப் பட்டியலை பார்ப்பது குறித்து விவரம் வெளியானது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்று சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில் கவுன்சிலிங் முறையில் ஒவ்வொரு ஆண்டும் பிஇ மற்றும் பிடெக் படிப்புக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்தக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் வரை உள்ள நிலையில் தான் 2025-26 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு மே மாதம் 5 ஆம் தேதி துவங்கியது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தவர்களுக்கு 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ஆம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பிறகு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி 10 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடந்தது.
இந்த பணி முடிவடைந்தை தொடர்ந்து விண்ணப்பம் செய்த மாணவ-மாணவிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் மாநிலத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். இந்த தரவரிசை எண்ணை பொறுத்து மாணவ-மாணவிகள் கௌன்சிலிங்கிற்கு அழைக்கப்பட உள்ளனர். மாணவ -மாணவர்கள் tneaonline.org என்ற
இணையதளத்தில் சென்று தரவரிசை பட்டியலை பார்த்துக் கொள்ளலாம். மேலும் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை மாதம் 14 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரையும், சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் 7 ஆம் தேதியும் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் கோவி செழியன் கூறுகையில், ‛‛பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தர வரிசைப் பட்டியலில் 145 பேர் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர். பொதுப்பிரிவில் காஞ்சிபரம் சாகஸ்ரா முதலிடம், நாமக்கல் மாணவி கார்த்திகா 2ஆம் இடம், அரியலூர் அம்லான் ஆண்டோ 3 ஆவது இடம் பிடித்தனர்.அரசு பள்ளிகளில் பயின்ற சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளி, முன்னாள் படை வீரர், விளையாட்டு வீரர்) கலந்தாய்வு ஜூலை மாதம் 7ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை மாதம் 14ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி வரை நடைபெறும். துணைக் கலந்தாய்வு ஜூலை மாதம் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும். ஏஸ்சி(ஏ) காலியிடம் எஸ்சி வகுப்பிற்கான கலந்தாய்வு ஜுலை மாதம் 25 ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் கடலூரைச் சேர்ந்த தாரணி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
கருத்துகள்