அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூபாய் 90 ஆயிரம் அபராதம் விதித்துத் தீர்ப்பு
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அதற்கு அடுத்த நாளில் ஞானசேகரன் என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டான்.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். 29 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அனைத்து விசாரணையும் முடிவடைந்த நிலையில், ஞானசேகரனை குற்றவாளி என்று கடந்த 28ஆம் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார்.இவனுக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஞானசேகரன் எனும் கொடுங் குற்றவாளி குறைந்தது 30 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றும்
அதற்குப் பிறகே, அவரது விடுதலை குறித்து பரிசீலிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அவர் மீது சாட்டப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி எம். ராஜலட்சுமி, தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி, தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.குற்றவாளி ஞானசேகரன் மீது பிஎன்எஸ் சட்டத்தின் சட்டப்பிரிவுகள் 329 (விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்), (சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்), 87 (வலுக்கட்டாயமாக கடத்தி சென்று ஆசைக்கு இணங்க வைத்தல்), 127(2) - (உடலில் காயத்தை ஏற்படுத்துதல்), 75(1)(2)(3) ( பாலியல் வன்கொடுமை செய்தல்), 76 (கடுமையாக தாக்குதல்) 64(1) (பாலியல் ரீதியாக துன்புறுத்துதல்), 351(3) (கொலை மிரட்டல் விடுத்தல்) 238(B) (பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66(இ) (தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல்), தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவு 4 என மொத்தம் 11 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் தண்டனை விவரங்கள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டன.அதில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 64-1ன் கீழ் பாலியல் துன்புறுத்தல் பிரிவின் அடிப்படையில் ஞானசேகரனுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.329 (விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்) என்ற பிரிவின் கீழ் 3 மாதங்களும் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் (126 (2)) என்ற குற்றத்திற்கு ஒரு மாதமும் உடலில் காயத்தை ஏற்படுத்துதல் 127(2) என்ற குற்றத்திற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமைக்கு 75(1)(2)(3) மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் கடுமையாக தாக்குதல் பிரிவு 76 எனும் குற்றத்திற்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல் விடுத்தல் (351(3)) என்ற குற்றத்திற்கு ஏழாண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாலியல் குற்றம் தொடர்பான ஆதாரங்களை அழித்தல் 238(B) குற்றச்சாட்டில் 3 ஆண்டு சிறையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.இந்த வழக்கில் வேறு சிலரும் சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், இதில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லையென தடயவியல் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். "இன்னொரு நபர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என சில விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இது குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். குற்றம்சாட்டப்பட்டவரின் தொலைபேசிதான் இந்த வழக்கில் முக்கியமான தடயவியல் சாட்சியம். அந்த போன் தடவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்த போனில் என்னென்ன விஷயங்கள் இருந்தன, அவருடைய சமூகப் பழக்க வழக்கங்கள் என்னென்ன, சமூக வலைதளங்கள் எதிலெல்லாம் அவர் இருக்கிறார் என்று ஆராயப்பட்டது. சம்பவம் நடந்த 23ஆம் தேதி அந்த போனில் என்னவெல்லாம் நடந்தது என்றும் ஆராயப்பட்டது. சம்பவ நேரத்தில் அந்த போன் 'ஃப்ளைட் மோடில்' (தொடர்புகொள்ள முடியாத நிலையில்) இருந்தது என்பதை தடய அறிவியல் ஆய்வகம் நீதிமன்றத்தில் பதிவுசெய்தது.
இதனை தடயவியல் நிபுணர் நீதிமன்றத்தில் வாய்மொழி சாட்சியமாகவும் அளித்தார். அந்த போனில் ஏர்டெல் சிம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஏர்டெல்லின் நோடல் அதிகாரி நீதிமன்றத்திற்கு வந்து, மே 23ஆம் தேதி மாலை 6.29 மணிக்குத்தான் அந்த போனுக்கு முதல் அழைப்பு வந்தது என்றும் அதற்குப் பிறகு 8.52வரை எந்த அழைப்பும் வரவில்லை என்றும் சாட்சியமளித்தார். 8.52க்கு பிறகுதான் அவருக்கு 'மிஸ்டு கால்கள்' குறித்த குறுஞ்செய்தி வந்தது.
பிஎன்எஸ்சின் 358 வது பிரிவின்படி, இன்னொரு குற்றவாளி இருப்பதாக நீதிமன்றம் கருதினால், அந்த நபரையும் இணைத்து நீதிமன்றமே விசாரணை நடத்தலாம். ஒரே ஒருவர் தான் என்பதை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால் தான், குற்றவாளிக்கு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. குற்றவாளி அந்தப் பெண்ணை அச்சுறுத்துவதற்காகவும் தானும் பல்கலைக்கழக ஊழியர் எனக் காட்டுவதற்காகவும்தான் போனில் பேசுவதைப் போல நடித்தார்" என அரசுத் தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் மேரி ஜெயந்தி விளக்கமளித்தார்.
கருத்துகள்