சென்னை அரசு உதவி பெறும் கல்லூரியான, எத்திராஜ் மகளிர் கல்லூரியில்
காலியான 64 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வந்த நிலையில் நியமனங்கள் செய்யப்பட்டன. தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை வழங்காமல் நியமனங்கள் நடத்தியதாகக் கூறி, 5 உதவிப் பேராசிரியர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டதை எதிர்த்து உதவிப் பேராசிரியர்கள் மகேஸ்வரி, மேனகா உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி சி.குமரப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர்கள் தரப்பில், “பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை வழங்குவது குறித்த எந்தத் தகவலும் இடம் பெறவில்லை. 2021-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தங்களுக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. தங்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவை இரத்து செய்து, ஒப்புதல் வழங்கும்படி தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்.” என வாதிடப்பட்டது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், “இனச் சுழற்சி முறை மற்றும் தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை என உரிய நடைமுறைகள் முறையாகப் பின்பற்றவில்லை.நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட கல்லூரி தான் வழக்கு தொடர முடியும். நியமனம் பெற்றவர்கள் வழக்குத் தொடர முடியாது.” என வாதிட்டார்.அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு ஒப்புதம் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கருத்துகள்