தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து தனது பணிகளை மேற்கொள்வார் என அப்பல்லோ நிர்வாகம் தகவல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து தனது பணிகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இந்த நிலையில், கொளத்தூரிலுள்ள கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திமுகவின் தலைமை அலுவலகமான அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டுக் காரில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென அவர் சோர்வாகக் காணப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையின் படி, '' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கம் போல நடைபயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டிருந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று முதலமைச்சரை நலம் விசாரித்துத் திரும்பினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், '' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனை முடிந்த பின் வீடு திரும்புவார்'' என்றனர்.




கருத்துகள்