"நல்லாட்சிக்கு செயற்கை நுண்ணறிவு" என்ற தலைப்பில் மாநில அளவிலான பயிலரங்கு - மத்திய அரசும் மணிப்பூர் அரசும் இணைந்து இம்பாலில் நடத்தின
நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துவதற்காக, மணிப்பூர் மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையும், மத்திய அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் உள்ள தேசிய மின்-ஆளுமைப் பிரிவும் இணைந்து, "நல்லாட்சிக்கு செயற்கை நுண்ணறிவு" என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கை இம்பாலில் உள்ள மாநில பயிற்சி அகாடமியில் 2025 ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடத்தின.
தேசிய மின்-ஆளுமைப் பிரிவின் திறன் மேம்பாட்டு முயற்சியின் முக்கிய அங்கமாக நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கம், மணிப்பூர் அரசின் மூத்த அதிகாரிகளிடையே நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் அனைத்து துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இது டிஜிட்டல் மாற்றம், பொது நிர்வாகம் ஆகியவற்றில் புதுமைக்கான அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமைந்தது.
மணிப்பூர் மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை இயக்குநர் திரு நம்பம் தேபன், மணிப்பூர் அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் திரு தோக்சோம் கிரண் குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாநிலத்தில் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான திறன் மேம்பாட்டிற்கான முக்கியத்துவத்தை அவர்கள் எடுத்துரைத்தனர். இந்த முயற்சி மிகவும் திறமையான, வெளிப்படையான, மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கலை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள்