உடுமலைப்பேட்டையில் விசாரணைக்காகச் சென்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட
சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் காவல்துறை நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அது குறித்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் கிரிஸ் யாதவ் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
அதில் : கைது செய்யப்பட்ட மணிகண்டனை சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டது. அப்போது கொலைக்குப் பயன்படுத்திய அதே அரிவாளை எடுத்து காவலரைத் தாக்க முயன்ற போது தான் துப்பாக்கியால் சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரிவாளைக் கீழே போடச் சொல்லி பலமுறை அறிவுறுத்தியும் மணிகண்டன் கேட்கவில்லை. 2 முறை துப்பாக்கியால் சுட்டதில் ஒரு குண்டு மணிகண்டன் மீது பாய்ந்ததால் உயிரிழப்பு ஏற்ப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாராபுரம் சாலையிலுள்ள வாஞ்சிநாதன் நகரில் வசித்து வந்தவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் (வயது 57). இவர், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். குடிமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக சார்பில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது.
அங்கு தங்கி வேலை பார்த்து வந்த மூர்த்தி (வயது 66) என்பவருக்கும் அவரது மகன்களுக்கும் அடிதடி ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சேர்ந்த மூர்த்தி, அவரது மகன்கள் மணிகண்டன், தங்கப்பாண்டி ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் யாதவ் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு
பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இதற்கிடையே, மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டி ஆகிய இருவரும் திருப்பூர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். புதன்கிழமை இரவு தனிப்படைக் காவல்துறை மணிகண்டனைக் கைது செய்தனர்.
மூவரிடமும் விடிய விடிய காவல்துறை விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடத்தைக் காண்பிப்பதற்காக மணிகண்டனை அழைத்துக் கொண்டு காவலர்கள் சிக்கனூத்து அருகே உள்ள உப்பாறு ஓடையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது என்கவுன்ட்டரில் மணிகண்டன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் கிரிஸ் யாதவ் மேலும் கூறுகையில் இதில் காயமடைந்த குடிமங்கலம் உதவி ஆய்வாளர் சரவணகுமார் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலரைத் தாக்க முயன்ற மணிகண்டன் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.இதையடுத்து மணிகண்டன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் விசாரணைக்குப் பின் இன்று உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மணிகண்டனைக் கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போது அரிவாளால் தாக்க முயன்றதாக என்கௌன்டர் மூலம் பலியான நிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பின்னர் வழங்கும் தண்டனையை காவல்துறையே வழங்கியது. ஆகவே
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் நடத்திய மக்கள் கூட்டத்தில் 13 பேரைச் சுட்டுக் கொன்ற காவலர்கள் மேல
ஒரு பிராதும் இதுவரை இல்லை, சுகமா இருக்காங்க, பதவி உயர்வு கூடக் கிடைத்திருக்கும்..
சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், ஃபெலிக்ஸை அடித்துக் கொன்ற காவல்காரர்களுக்கு இன்னும் சம்பளம் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில்
நேற்று முன்தினம் இரவு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக்கொன்றதாகக் கூறப்படும் மணிகண்டன் இன்று பழிக்குப்பழியாக சுட்டுக் கொலை
குற்றவாளியைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து வழக்கை நடத்துவது மட்டும் தான் காவல்துறையின் வேலை, குற்றம் நிரூபிக்கப்பட்டு
தண்டிப்பது நீதித்துறையின் வேலை
காவல்துறையே தங்கள் வசதிக்கு தண்டனை வழங்குமானால்,
அங்கு மக்கள் ஜனநாயகம் செத்துப்போய்விட்டது என்று தான் பொருள் அது மட்டுமல்லாது
ஒரு என்கவுண்டர் பல உண்மைகளையும் சேர்த்துக் கொன்று புதைக்கிறது..
ஒரு கொலை செல்வாக்குள்ளதோட்டத்தில் வேலை செய்பவர்கள் தொடர்ச்சியாக அதிகம் கொல்லப்படுவது திருப்பூர் மாவட்டத்தில் தான், கடந்த முறை இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்ற போது காவல்துறை திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள், வெளியூரில் இருந்து வந்தவர்கள் என அனைவரின் பின்புலத்தையும் விசாரிப்பதாக அறிவித்தது. ஆனால் தற்பொழுது தோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீதும் குற்ற வழக்குகள் இருக்கிறது என்கிறார்கள்.
அதுவும் கொலையாளிகள் சட்ட மன்ற உறுப்பினர் தோட்டத்திலேயே அடைக்கலம் தேடி இருந்திருக்கிறார்கள். காவல் துறை தான் அறிவித்தது போன்று சரியான முறையில் சோதனை செய்திருந்தால் இந்த 3 குற்றவாளிகள் அன்றே நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டிருப்பார்கள். இன்று ஒரு உதவி ஆய்வாளர் உயிர் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
ஏதேனும் சம்பவம் நடைபெற்றால் நிவாரணம் கொடுப்பது மட்டுமல்லாமல் அரசின் பணி இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியதும் அரசின் முதல் கடமை . யாரையோ காப்பாற்றுவதற்காகவும் இருக்கலாம். ஆனால் நீதி விசாரணைக்கு பிறகு தான் உண்மை வெளிவரும். சமூக நீதி சமநீதியாக இல்லாத வரை அது பொது நீதி ஆகாது.
கருத்துகள்