பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள்: புதுதில்லியில் ரூ.1,723 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த தினத்தையொட்டி புதுதில்லியில் 1723 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, மத்திய அமைச்சர் திரு ஹர்ஷ் மல்கோத்ரா மற்றும் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, நாட்டில் உள்ள அனைத்து குடிமக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதாக கூறினார். அவரது பிறந்த தினத்தையொட்டி இருவார கால சேவைகள் திட்டம் கடந்த 11 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த இருவார கால சேவையில் கிராமப்புற, மாவட்ட பஞ்சாயத்து அமைப்புகள், மாநில அரசுகள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
பிரதமரின் பிறந்த தினத்தையொட்டி நடத்தப்பட்டு வரும் இருவார கால சேவைகள் திட்டத்தின் கீழ் மக்களுக்கான நலத்திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 60 கோடி ஏழை மக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்ததுடன், 25 கோடி மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மேலே கொண்டு வரவும் உதவினார் என்று அவர் தெரிவித்தார்.
எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து மக்களும் பயனடையும் வகையில் நலத்திட்டங்களை பிரதமர் செயல்படுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். 5 லட்சத்திற்கான சுகாதார காப்பீட்டு திட்டத்தை முந்தைய தில்லி அரசு செயல்படுத்தவில்லை என்று கூறினார். நாட்டில் உள்ள 140 கோடி மக்களையும் தனது குடும்ப உறுப்பினர்களாக கருதி பிரதமர் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர்களது நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டுள்ளதாகவும் திரு அமித் ஷா தெரிவித்தார்.
அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டுவது, காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கான வழித்தடம், கர்தார்பூர் சாகிப் வழித்தடம் போன்ற நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதையும், அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுள்ளது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
வரும் 2027-ம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
நாட்டைப் பாதுகாப்பாகவும், பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்ததாகவும் மாற்றுவது முதல், ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து, அவர்களுக்கு வசதிகளை வழங்குவது வரை, பிரதமரின் முயற்சிகளை நாடு நீண்ட காலத்திற்கு நினைவில் கொள்ளும் என்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார்.
கருத்துகள்