இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது.
காலை 10 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இதில் வாக்களிக்கின்றனர். தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகள சார்பில் இண்டியா கூட்டணியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை இன்று மாலை நடைபெறுகிறது. என்டிஏ கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் (வயது 68) தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக உள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த கொங்கு வேளாளக் கவுண்டர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட இவர் அனைவரிடமும் சுமுகமாக பழகக்கூடியவர்.
சர்ச்சைகளில் சிக்காதவர். 1998 ஆம் ஆண்டு மற்றும் 1999-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மக்களவைக்கு தேர்வானவர். மத்திய இணை அமைச்சர் பதவி வகித்தார் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதி முதல் பதவி வகிக்கிறார்.
இவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி (வயது 79). இவர் ஆந்திரப் பிரதேசத்தில் (தற்போது தெலங்கானா) ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அகுலா மைலாரம் எனும் கிராமத்தில் பிறந்தவர். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியானவர் 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வுபெற்றார். தனது பணிக்காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். கறுப்பு பண வழக்கு விசாரணையில் மத்திய அரசு மெத்தனமாகச் செயல்பட்டதாக விமர்சித்தார். நக்சலைட்களுடன் சண்டையிட சத்தீஸ்கர் அரசு உருவாக்கிய சல்வா ஜூடும் அமைப்பை சட்டவிரோதமானது
என்று அறிவித்தவர். ஆவர். இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்களார் பட்டியலில் மாநிலங்களவை உறுப்பினர் 233 பேரும் (தற்போது 5 இடங்கள் காலி), மாநிலங்களவை நியமன உறுப்பினர் 12 பேரும், மக்களவை உறுப்பினர்கள் 543 பேரும் (ஒரு இடம் காலி) இடம்பெற்றுள்ளனர்.நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆளும் என்டிஏ கூட்டணிக்கே அதிகப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. மொத்தம் உள்ள 542 மக்களவை உறுப்பினர்களில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. மொத்தம் உள்ள 240 மாநிலங்களவை உறுப்பினர்களில் ஆளும் கட்சி கூட்டணிக்கு 129 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இரு அவைகளிலும் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 786. இதில், 394 உறுப்பினர்களின் ஆதரவை பெறுபவர் அடுத்த குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.
என்டிஏ கூட்டணிக்கு 422 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் பிஆர்எஸ், பிஜேடி ஆகிய கட்சிகள் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் இன்று மாலை 6 மணிக்கே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலை உள்ளது







கருத்துகள்