பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியில் நேற்று நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயில் அருகில் நேற்று காரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தியா வில் டெல்லியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த 15 மணி நேரத்தில் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது, இந்தப்பகுதி, வழக்கறிஞர்கள், விசாரணைக்கு வரும் தனிநபர்கள் ஒன்று கூடும் பரபரப்பான பகுதி. குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் மற்ற விபரங்களை உறுதிப்படுத்தவில்லை. காவல்துறை அலுவலர்கள் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 2014 ஆம் ஆண்டில் இதே போன்ற தாக்குதல் அதே நீதிமன்ற வளாகத்தில் நடந்தது, இந்தச் சம்பவத்தில் ஒரு நீதிபதி உள்ளிட்ட 12 பேர் பலியானார்கள். நேற்று மதியம் 12;39 மணியளவில், நுழைவாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இந்தக் குண்டு வெடித்துள்ளது.
குண்டு வெடிப்பின் சப்தம் 6 கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அருகிலிருந்த கார்களும் தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதி புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. இந்தக் குண்டு வெடிப்பில், குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 20 க்கும் அதிகமானோர் படு காயமடைந்துள்ளனர். சிகிச்சைக்காக பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனமான PIMS ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அச்சம் எழுந்துள்ளது.
காவல்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானை குற்றஞ்சாட்டியுள்ளார்.




கருத்துகள்