டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு விதிகள், 2025 அறிவிக்கப்பட்டுள்ளன
டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு விதிகள், 2025-ஐ 2025, நவம்பர் 14 அன்று மத்திய அரசு அறிவித்தது. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2023 முழுமையாக செயல்படுத்தப்படுவதை இது குறிக்கிறது. இந்தச் சட்டமும் விதிகளும் சேர்ந்து, டிஜிட்டல் தனிப்பட்ட தரவைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான தெளிவான,
குடிமக்களை மையமாகக் கொண்ட கட்டமைப்பை உருவாக்குகின்றன. அவை தனிப்பட்ட உரிமைகள் மற்றும் சட்டபூர்வமான தரவு செயலாக்கத்தில் சமமான முக்கியத்துவத்தை அளிக்கின்றன.
வரைவு விதிகளை இறுதி செய்வதற்கு முன், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொதுமக்களின் கருத்துகளை வரவேற்றது. தில்லி, மும்பை, குவஹாத்தி, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த விவாதங்களில் பல்வேறு பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். புத்தொழில் நிறுவனங்கள்,
எம்எஸ்எம்இ-கள், தொழில்துறை அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள், அரசுத் துறைகள் என அனைத்தும் விரிவான பரிந்துரைகளை வழங்கின. குடிமக்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இறுதி விதிகளை வடிவமைப்பதில் இந்தப் பங்களிப்புகள் முக்கியப் பங்கு வகித்தன.
விதிகள் அறிவிப்பின் மூலம், தரவுப் பாதுகாப்பிற்கான நடைமுறை மற்றும் புத்தாக்கத்திற்கு ஏற்ற அமைப்பை இந்தியா இப்போது பெற்றுள்ளது. இது புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது இணக்கத்தை ஊக்குவிக்கிறது; நாட்டின் வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழல் அமைப்பில் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
2023, ஆகஸ்ட் 11 அன்று நாடாளுமன்றம் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. இந்தியாவில் டிஜிட்டல் தனிநபர் தரவைப் பாதுகாப்பதற்கு முழுமையான கட்டமைப்பை இந்தச் சட்டம் உருவாக்குகிறது. நிறுவனங்கள் அத்தகைய தரவைச் சேகரிக்கும்போது அல்லது பயன்படுத்தும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இது விளக்குகிறது. இந்தச் சட்டம் 'சரள்' அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இதன் பொருள் இது எளிமையானது, அணுகக்கூடியது, பகுத்தறிவு சார்ந்தது மற்றும் செயல்படக்கூடியது. மக்கள் மற்றும் வணிகங்கள் விதிகளை சிரமமின்றிப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய மொழி மற்றும் தெளிவான விளக்கப்படங்களைப் பயன்படுத்துகிறது.
இந்தச் சட்டம் ஏழு முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இவற்றில் ஒப்புதல் மற்றும் வெளிப்படைத்தன்மை, நோக்க வரம்பு, தரவு குறைப்பு, துல்லியம், சேமிப்பு வரம்பு, பாதுகாப்பு, பொறுப்பேற்றல் ஆகியவை அடங்கும். தனிப்பட்ட தரவு, சட்டபூர்வமான மற்றும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதையும் அவை உறுதி செய்கின்றன.
தரவு காப்பாளர்கள் இணக்கமாக இல்லையென்றால் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் கணிசமாக அபராதம் விதிக்கிறது. தரவு காப்பாளர்கள் நியாயமான பாதுகாப்பைத் தரத் தவறினால் ரூ. 250 கோடி வரை அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். தனிப்பட்ட தரவு மீறல் மற்றும் குழந்தைகள் தொடர்பான கடமைகளை மீறுவது குறித்து வாரியம் அல்லது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அறிவிக்காமல் இருப்பது ஒவ்வொன்றுக்கும் ரூ.200 கோடி வரை அபராதம் விதிக்கக்கூடும். சட்டம் அல்லது விதிகளை மீறும் தரவு காப்பாளர்களுக்கு ரூ. 50 கோடி வரை அபராதம் விதிக்கக்கூடும்.
இந்தச் சட்டமும் விதிகளும் இணைந்து, ஒரு வலுவான மற்றும் சமநிலையான அமைப்பை உருவாக்குகின்றன. அவை தனியுரிமையை வலுப்படுத்துகின்றன, பொது நம்பிக்கையை வளர்க்கின்றன, பொறுப்பான புத்தாக்கங்களை ஆதரிக்கின்றன. அவை இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் பாதுகாப்பான மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையுடன் வளர உதவுகின்றன.
இந்த விதிகள் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட முழுமையான இந்திய டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு வாரியத்தை நிறுவுகின்றன. குடிமக்கள் ஆன்லைனில் புகார்களைப் பதிவு செய்து, தனிச்சிறப்புப் போர்டல் மற்றும் மொபைல் பயன்பாடு மூலம் தங்கள் வழக்குகளைக் கண்காணிக்க முடியும். இந்த டிஜிட்டல் அமைப்பு விரைவான முடிவுகளை ஆதரிக்கிறது மற்றும் குறை தீர்க்கும் செயல்முறையை எளிதாக்குகிறது. வாரியத்தின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்படும்.
டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகள், நாட்டிற்கு நம்பகமான, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் டிஜிட்டல் சூழலை உருவாக்குவதில் ஒரு முக்கியமான செயல்பாட்டைக் குறிக்கின்றன. தனிப்பட்ட தரவு எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதை அவை தெளிவுபடுத்துகின்றன, தனிநபர்களின் உரிமைகளை வலுப்படுத்துகின்றன மற்றும் நிறுவனங்களுக்கு உறுதியான பொறுப்புகளை உருவாக்குகின்றன. இந்த நடவடிக்கைகள் மூலம் குடிமக்களுக்கு சேவை செய்யும், டிஜிட்டல் நிர்வாகத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பாதுகாப்பான, மிகவும் வெளிப்படையான தரவுச் சூழல் அமைப்பை நோக்கி இந்தியா முன்னேறுகிறது.




























கருத்துகள்