கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றினார்
9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடியை பிரதமர் விடுவித்தார்
இயற்கை விவசாயத்தில் உலகளாவிய மையமாக மாறும் பாதையில் இந்தியா பயணிக்கிறது: பிரதமர்
‘ஒரு ஏக்கர், ஒரு பருவம்’-ஒரு பருவ காலத்திற்கு ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை வேளாண்மை செய்வோம்: பிரதமர்
இயற்கை விவசாயத்தை முழுவதும் அறிவியலின் அடிப்படையிலான இயக்கமாக மாற்றுவது நமது இலக்காக இருக்க வேண்டும்: பிரதமர்
கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.11.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கோயம்புத்தூரை கலாச்சாரம், கனிவு மற்றும் படைப்பாற்றலின் நகரம் என்று குறிப்பிட்டு, தென்னிந்தியாவின் தொழில்முனைவோரின் ஆற்றல் சக்தியாக விளங்குகிறது என்று கூறினார். இந்த நகரத்தின் ஜவுளித்துறை, தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். கோயம்புத்தூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது குடியரசு துணைத்தலைவராகப் பொறுப்பு வகிப்பது, இந்த நகருக்குக் கூடுதல் சிறப்பைத் தருவதாக அவர் கூறினார்.
வரும் ஆண்டுகளில் இந்திய வேளாண்மைத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைத் தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். “இயற்கை விவசாயத்தில் உலகளாவிய மையமாக மாறும் பாதையில் இந்தியா முன்னேறி வருகிறது” என்று திரு மோடி தெரிவித்தார். இந்தியாவின் பல்லுயிர் பெருக்கம் அதிகரித்து வருவதாகவும், விவசாயத்தை நவீன மற்றும் அளவிடக்கூடிய வாய்ப்பாக இளைஞர்கள் கருதுவதாகவும் பிரதமர் கூறினார். இந்த மாற்றம், ஊரகப் பொருளாதாரத்தை பெருமளவு வலுப்படுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த 11 ஆண்டுகளில் ஒட்டுமொத்த வேளாண் துறையும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருவதாக அவர் கூறினார். வேளாண் கடன் அட்டை திட்டத்தின் வாயிலாக இந்த ஆண்டு விவசாயிகளுக்கு சுமார் ரூ.10 லட்சம் கோடி உதவித்தொகை வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். உயிரி உரங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு கூடுதல் பலன்களை வழங்கியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டத்தின் 21-வது தவணை இன்று விடுவிக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்திருப்பதாக பிரதமர் கூறினார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.4 லட்சம் கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 21-வது நூற்றாண்டில் இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், காலநிலை மாற்றங்களை சந்திக்கவும், ஆரோக்கியமான மண்ணை பராமரிக்கவும், ஆபத்தான ரசாயனங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் இயற்கை விவசாயம் உதவுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
இயற்கை விவசாயத்தைப் பின்பற்றுமாறு மத்திய அரசு விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக திரு மோடி கூறினார். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இயற்கை வேளாண்மை சார்ந்த தேசிய இயக்கத்தின் மூலம் ஏற்கனவே லட்சக்கணக்கான விவசாயிகள் இணைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த முன்முயற்சியின் நேர்மறை தாக்கத்தை தென்னிந்தியாவில் காண முடிகிறது என்றும், தமிழ்நாட்டில் மட்டுமே தோராயமாக 35,000 ஹெக்டேர் நிலம் இயற்கை விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சிறு தானியங்களின் சாகுபடியை இயற்கை வேளாண்மையுடன் இணைப்பதால் பூமியை பாதுகாக்க முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் தேன் மற்றும் சிறு தானியத்தால் செய்யப்பட்ட தேனும் திணை மாவும் முருகக் கடவுளுக்கு படைக்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார். தமிழ்நாட்டின் கம்பு, சாமை, ராகி போன்ற சிறு தானியங்கள் பல தலைமுறைகளாக பாரம்பரிய உணவு முறைகளில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க எதிர்காலத்திற்குத் தேவையான வேளாண் சூழலியலை கட்டமைப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இயற்கை விவசாயத்தின் ‘ஒரு ஏக்கர், ஒரு பருவம்’ என்ற நடைமுறையைப் பின்பற்றுமாறு விவசாயிகளை பிரதமர் கேட்டுக்கொண்டார். வேளாண் பாடத்திட்டத்தில் இயற்கை விவசாயத்தை முக்கிய பாடமாக சேர்க்குமாறு விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். “இயற்கை விவசாயத்தை முழுவதும் அறிவியலின் அடிப்படையிலான இயக்கமாக மாற்றுவது நமது இலக்காக இருக்க வேண்டும்”, என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








கருத்துகள்