அறப்போர் இயக்கம் சார்பாக வந்த பத்திரிக்கை செய்திக் குறிப்பு: திருநெல்வேலி கல்குவாரிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்து கேட்பு நிகழ்வில் குவாரி தரப்பினர் செய்த திட்டமிட்ட தாக்குதல்
திருநெல்வேலியில் கல் குவாரிகளால் மக்கள் எந்த விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை ஆவணப்படுத்தும் அறப்போர் இயக்க மக்கள் கருத்துக்களை கேட்கும் நிகழ்வு நேற்று முன்தினம் திருநெல்வேலி ரோஸ் மஹாலில் நடந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் V. சுரேஷ் தலைமையில் அடங்கிய குழு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர் இந்தக் குழுவில் டாக்டர் சுரேஷ் தவிர தன்னாட்சி அமைப்பு கிராம சபை வல்லுநர் நந்தகுமார், நீர் மேலாண்மை நிபுணர் திரு உதயகுமார் , சுற்றுச்சூழல் நிபுணர் தணிகைவேல் , விவசாய மேலாண்மை நிபுணர் நந்தினி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஏற்கனவே திருநெல்வேலியில் கல் குவாரி முறைகேடுகளால் எப்படி ஒரு கோடிக்கும் மேற்பட்ட மெட்ரிக் டன் சட்டவிரோதமாக கனிமவளக் கொள்ளை நடந்தது என்பதை ஆவண ரீதியாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் பேசினார்.
அதிகமான கல்குவாரிகள் இருக்கக்கூடிய ராதாபுரம் பகுதியில் இருந்து பெரும்பான்மையான மக்கள் வந்து தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து தெரிவித்தனர். முக்கியமாக அதிகப்படியான வெடி வெடிப்பதால் வீடுகள் அதிர்வது, நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவதும்,குவாரி வேலைகளால் ராதாபுரம் வாய்க்காலில் தண்ணீர் வராதது மற்றும் விவசாய பாதிப்பு குறித்து மக்கள் பேசி வந்தனர். மேலும் ஆலங்குளம், பொன்னாக்குடி, கயத்தாறு, தாதநூத்து, அடைமிதிப்பான்குளம், ரெட்டியார்பெட்டி, தாழையூத்து, தச்சநல்லூர், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திசையன்விலை, அம்பாசமுத்திரம் போன்ற பல இடங்களில் இருந்தும் குவாரிகளால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறித்தும் மக்கள் தெரிவித்தனர்.
ஆனால் கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளே நுழைந்து சில நிமிடங்களில் கலவரம் செய்ய முயற்சித்தனர். அவர்கள் குவாரிக்கு ஆதரவான வக்கீல்கள் எனக் கூறி நிகழ்வை நடத்தவிடாமல் கலாட்டா செய்யத் துவங்கினர். நாற்காலிகளை தூக்கி எறிந்து குழுத் தலைவர் Dr. சுரேஷ் மற்றும் சிலர் மீது தாக்குதலும் நடத்தினர்.
திட்டமிட்டு குறி வைத்துதத் தாக்கிய இந்த தாக்குதலால் Dr.சுரேஷ் தலையில் காயம் ஏற்பட்டது. கல் குவாரியால் தங்கள் கிராமத்தில் உள்ள பிரச்சனையை பற்றி பேச வந்திருந்த ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தினர். மேலும் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிபடுத்தக் கூடாது என்ற நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்தவர்கள் என்று கேள்விப்படுகிறோம். இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் காவல்துறைக்கு அளித்துள்ளது. காவல்துறை இந்த அப்பட்டமான வன்முறை தாக்குதல் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ? காவல்துறை உடனடியாக தாக்குதல் நடத்திய குண்டர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை ஆவணப்படுத்தி அறிக்கையாக அரசுக்கு சமர்பிக்கும் வேலையை அறப்போர் இயக்கம் தொடர்ந்து மேற்கொள்ளும். அடுத்த சில நாட்களில் மக்கள் சொன்ன பிரச்சனைகளை தொகுத்து அறிக்கையாக வெளிக்கொண்டு வரப் போவதாக நிபுணர் குழு தெரிவித்தது.
திருநெல்வேலியில் சட்டவிரோதக் கல் குவாரிகளால் மக்கள் படும் இன்னல்களை தடுக்கவும் சட்டவிரோத கல் குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கவும் அறப்போர் இயக்கத்தின் முயற்சிகள் இன்னும் வேகமாகவே தொடரும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.











கருத்துகள்