எஸ்ஐஆர் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமில்லை என தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அலுவலர் தகவல்
தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் எஸ்ஐஆர் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமில்லை என தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அலுவலர் அா்ச்சனா பட்நாயக் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
அதேவேளையில், டிசம்பர் மாதம் 4 ஆம் தேதிக்குள் கணக்கெடுப்புப் படிவத்தை சமர்ப்பிக்காவிட்டால் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதென்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தலைமை தோ்தல் அலுவலர் அா்ச்சனா பட்நாயக், கணக்கெடுப்புப் படிவத்தின் முதல் பகுதி மட்டுமே நிரப்பப்பட்ட படிவங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அதாவது, முதல் பகுதி மட்டுமே நிரப்பப்பட்ட படிவங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நிராகரிக்கப்படாது என்றும் உறுதி அளித்தார். "2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரையோ அல்லது உறவினர் பெயரையோ வாக்காளர்கள் கண்டுபிடிக்க முடியாவிட்டால், டிசம்பர் 4, 2025 ஆம் தேதிக்கு முன் வாக்காளர் கையொப்பமிட்ட கணக்கீட்டுப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (பிஎல்ஓ) சமர்ப்பித்தால், அவர்களின் பெயர் டிசம்பர் மாதம் 9, 2025 அன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்" என அர்ச்சனா பட்நாயக் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
எனவே, தமிழ்நாட்டு மக்கள் 2002 அல்லது 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் அல்லது உறவினர்களின் பெயர் மற்றும் விவரங்களை கண்டுபிடித்து படிவத்தில் நிரப்பாவிட்டாலும், முதல் பகுதியை மட்டும் நிரப்பிக் கொடுத்தாலே போதுமானது என்று தெளிவுபடுத்தப்பட்டிருப்பதன் மூலம் இன்னும் படிவத்தை நிரப்பிக் கொடுக்காத பல லட்சக்கணக்கான மக்களின் அச்சம் நீங்கியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அர்ச்சனா பட்நாயக் ஒரு சில நாள்களுக்கு முன்பு கொடுத்திருந்த விளக்கத்தில், வாக்குரிமை போய்விடுமோ என்ற அச்சம் எவருக்கும் தேவையில்லை. தங்களால் இயன்ற வரை படிவங்களைப் பூா்த்தி செய்து வழங்கலாம். டிசம்பா் 4-ஆம் தேதி வரை கணக்கீட்டுப் படிவங்களை அளிக்கலாம். அதன் பின்னா், அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. படிவங்களைப் பூா்த்தி செய்து அளித்தாலே பெரும்பாலும் அவா்களது பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுவிடும்.
இணையவழியேயும் கணக்கீட்டுப் படிவத்தை சமா்ப்பிக்கலாம். ஆனால், இணையப் பக்கத்தில் எதிர் வரும் திங்கள்கிழமை வரை அதாவது டிசம்பர் மாதம் 1ஆம் தேதி வரை மட்டுமே சமா்ப்பிக்கலாம். உரிய காரணம் இல்லாமல் தகுதியான எவரது பெயரும் நீக்கப்படாது. இறந்தவா்கள், குறிப்பிட்ட முகவரியில் இல்லாதவா்கள், படிவம் பெறாமல் இருந்தவா்கள், வேறு இடங்களுக்கு நிரந்தரமாகக் குடிபெயா்ந்தவா்கள், இரட்டை வாக்குரிமை உள்ளவா்கள் ஆகியோரது பெயா்கள் மட்டுமே நீக்கப்படும்.
வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டால் அதுதொடா்பான உரிய விளக்கமும், காரணமும் வரும் டிசம்பர். 9-ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியலின்போது தெரிவிக்கப்படும்.
ஒரே தொகுதிக்குள் இடம்பெயா்ந்தவா்கள் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் இருந்து பெற்று பூா்த்தி செய்து கொடுக்கலாம். வேறு தொகுதியில் குடியேறி இருந்தால் முகவரியை மாற்றுவதற்கான படிவம் 8-ஐ சமா்ப்பித்தல் அவசியம் என்று தெரிவித்திருக்கிறார்.





கருத்துகள்