கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா நெய்தலூர் காலனி, ராஜன் நகர் பகுதியில், காசி ரைஸ் பிளவர் மற்றும் ஆயில் மில் செயல்பட்டது.
அதற்கு புதிய மின் இணைப்புப் பெற, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொது மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சுந்தரராஜ் என்பவர், குளித்தலை சின்ன பனையூர் மின்வாரிய அலுவலகத்திலுள்ள உதவி பொறியாளர் டி.ஆர். நாராயணனை கடந்த 2011-ஆம் ஆண்டு அணுகியபோது, புதிய மின் கம்பம் அமைப்பதற்கு ரூபாய். 2000 லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தரராஜ் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தார்.அதனடிப்படையில், 10.08.2011-ஆம் தேதி சுந்தரராஜிடமிருந்து ரூபாய். 2000 லஞ்சம் பெற்ற போது உதவி மின் பொறியாளர் நாராயணன் பணம் பெற்ற கையுடன் கைது செய்யப்பட்டார். அது தொடர்பாக, கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து, நேற்று மாலை நீதிபதி இளவழகன் தீர்ப்பளித்தார்.
அவர் வழங்கிய தீர்ப்பில், லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய். 10,000 அபராதமும், விதித்தார் அதை செலுத்த தவறினால் மேலும் 9 மாத சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
இதனை தொடர்ந்து, நாராயணனை திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்க காவலர் களா பாதுகாப்பாக கூட்டிச் சென்றனர். புதிய மின் கம்பம் அமைக்க ரூபாய். 2000 லஞ்சம் கேட்ட வழக்கில் உதவிப் பொறியாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.







கருத்துகள்