இந்தியாவில் காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.
இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவை திருத்தப்படும்.
காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்வது மற்றும் திருத்தம் செய்யக் கோரும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது.
'சட்ட ரத்து மற்றும் திருத்த மசோதா, 2025' மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தி, குரல் வாக்கெடுப்பு மூலம் அவையால் நிறைவேற்றப்பட்டது. முன்பே, நாடாளுமன்ற மக்களவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது.
மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த அர்ஜுன் ராம் மேக்வால், "சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்குள்ள நடைமுறைக்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.1925-ஆம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் அப்போதைய மெட்ராஸ், பம்பாய், கொல்கத்தா மாகாணங்களில் ஹிந்து, பௌத்தர், சீக்கியர், சமணர் அல்லது பார்சி இனத்தவர் உயில் எழுதினால், அது சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், இந்த விதி இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது. ஜாதி, மதம் மற்றும் பாலினப் பாகுபாடுகள் அரசியலமைப்பில் தடுக்கப்பட்டுள்ளன. அப்படி எனில், இது ஏன் முஸ்லிம்களுக்கு பொருந்தாது? இந்த சீர்திருத்தங்கள் காலனித்துவ மனநிலையிலிருந்து விடுதலையை நோக்கிய ஒரு படி" எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த மசோதா சட்டமானால், இந்திய டிராம்வேஸ் சட்டம், 1886, லெவி சர்க்கரை விலை சமநிலை நிதி சட்டம், 1976, மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சட்டம், 1888 உள்ளிட்ட 71 சட்டங்கள் ரத்து செய்யப்படும்.
மேலும், பொது ஆணைகள் சட்டம் 1897, சிவில் நடைமுறைச் சட்டம் 1908, பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அமைப்பில் சொற்களஞ்சியத்தைப் புதுப்பித்தல் மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவை திருத்தப்படும்.




கருத்துகள்