காசநோய் ஒழிப்புப் பணிகள் குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா கலந்துரையாடினார்
காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா இன்று கலந்துரையாடினார். காசநோய் ஒழிப்பில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், 2015-ம் ஆண்டு காசநோயால் ஒரு லட்சம் பேரில் 237 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2024-ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்து 187-ஆக இருந்தது என்று கூறினார். இது உலக அளவில் சராசரியாக 12 சதவீதமாக இருந்த நிலையில், இந்தியாவில் அந்த சரிவு இரட்டிப்பாக இருந்ததாக தெரிவித்தார். காசநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளதாகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 92 சதவீதத்தைக் கடந்துள்ளதாகவும் கூறினார். இது உலகளாவிய சூழலைவிட அதிகம் என்று அவர் குறிப்பிட்டார். இந்நோய் குறித்து முன்னதாக கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் வாயிலாக இந்த முன்னேற்றம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
காசநோய் இல்லா இந்தியா இயக்கம் உண்மையான மக்கள் இயக்கமாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் காசநோய் கண்டறிதல் குறித்து எடுத்துரைத்த திரு நட்டா, நாடு முழுவதும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான எக்ஸ்ரே உபகரணங்கள் உள்ளிட்ட புதுமைக் கண்டுபிடிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இந்நோயைத் தவிர்க்க ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர், நிக்சாய் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்திற்காக மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த 500 ரூபாய் உதவித் தொகை இரட்டிப்பாக்கப்பட்டு 1,000 ரூபாயாக அளிக்கப்படுகிறது என்று கூறினார். இதற்காக கடந்த 2018-ம் ஆண்டு முதல் 1.3 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்குகளுக்கு ரூ.4,400 கோடிக்கும் அதிகமான தொகை நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காசநோய்க் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய மத்திய அமைச்சர் காசநோய் பாதிப்புகள் நகர்ப்புற குடிசைப் பகுதிகள், பழங்குடியின, புலம்பெயர்ந்தோர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களிடையே ஏற்படுவதாக குறிப்பிட்டார்.
காசநோய் ஒழிப்பிற்காக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வலிமையான மக்கள் பங்கேற்பு அணுகுமுறையை பாராட்டிய திரு நட்டா, காசநோய் ஒழிப்பு நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், மைபாரத் தன்னார்வலர்கள் ஆகியோர் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதாகத் தெரிவித்தார்.
இந்த உரையாடலை வரவேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் காசநோய் ஒழிப்புக்கு முழு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தனர்





கருத்துகள்