அரசியல் சர்ச்சைக்குரிய யூடியூபர் சவுக்கு சங்கர், இன்று அதிகாலை சென்னை ஆதம்பாக்கம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
ஒரு சினிமா காட்சி போல நடந்த இந்தக் கைது நடவடிக்கை, தற்போது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகியுள்ளது அதன் பின்னணி விபரம்: சிக்க வைத்த சினிமா சம்பவம்:- அவரது கைதின் பின்னணியில் சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆயிஷா சாதிக் என்பவர் அளித்த புகார் குறித்த விரிவான விவரங்களைக் கண்போம் :ஆயிஷா சாதிக் என்பவர் தயாரித்து இயக்கிய 'ரெட் அண்ட் பாலோ' (Red and Follow) எனும் திரைப்படம் விரைவில் வெளியாகத் தயாராக இருந்த நிலையில், சவுக்கு சங்கர் அவரது யூடியூப் பக்கத்தில் அந்தத் திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, அந்தத் திரைப்படம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் (Drug Money) தயாரிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். மேலும், போதைப்பொருள் வழக்கில் கைதான அஜய் வாண்டையார் என்பவர் இப்படத்தில் நடித்திருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் காணொளியும் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் தன்னை அவதூறாகப் பேசியதாகவும், அந்த க் காணொளிக் காட்சியை நீக்கக் கோரியபோது தன்னிடம் ரூபாய். 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் ஆயிஷா சாதிக் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் ஒரு புகார் அளித்தார்.
ஆதம்பாக்கம் காவல்துறையினர் இது தொடர்பாக சவுக்கு சங்கருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில், இன்று அதிகாலை பல்லாவரம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 12-வது மாடியில் அவர் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற காவலர்கள் கதவைத் திறக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், சவுக்கு சங்கர் உள்ளே இருந்து கதவைத் தாழிட்டுக் கொண்டு, "என்னை அநியாயமாகக் கைது செய்யப் பார்க்கிறார்கள்" என காணோளி ஒன்றை வெளியிட்டார். நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னும் அவர் கதவைத் திறக்காததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
அதற்கு அதிமுக கண்டனமும் - அதற்கு திமுக விளக்கமும்
இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் வார்த்தை வாதப் பிரதிவாதம் மூண்டது:அதிமுக கண்டனம்:
"இந்த அரசு விமர்சிப்பவர்களை ஒடுக்கும் கொடுங்கோல் ஆட்சியை நடத்துகிறது. மழை வெள்ளம், பெண்கள் பாதுகாப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளைக் கவனிக்காத அரசு, ஒரு சினிமா கருத்துக்காகக் கதவை உடைத்துக் கைது செய்வது அதிகார போதையின் உச்சம்" என்று அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் குற்றம் சாட்டினார்.
திமுக விளக்கத்தில்:
இதற்குப் பதிலளித்த திமுகவின் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "சட்டம் தன் கடமையைச் செய்கிறது. ஒரு பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் நீதிமன்ற உத்தரவுப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை மிக நாகரீகமாகவே நடந்துகொண்டது; ஆனால் சவுக்கு சங்கர் ஒத்துழைக்க மறுத்ததால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று விளக்கமளித்தார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.







கருத்துகள்