நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பணியாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும்- குடியரசுத் தலைவர்
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் மாநிலங்களுக்கு இடையேயான கலாச்சார ஒன்றுகூடல் விழா - கார்த்திக் ஜாத்ராவை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஜார்க்கண்டில் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த இடம், செயலாற்றிய இடம் ஆகியவற்றிற்கு செல்வது தமக்கு யாத்திரை செல்வது போன்ற உணர்வை அளிப்பதாக கூறினார். சமூக நீதிக்கும் பழங்குடியினப் பெருமைக்கும் ஒரு சிறந்த அடையாளமாக அவர் நம் அனைவராலும் போற்றப்படுகிறார் என்று அவர் தெரிவித்தார்.
பங்கராஜ் சாஹேப் கார்த்திக் ஓரன், பகவான் பிர்சா முண்டாவின் குறிக்கோள்களுக்கு ஏற்ப பழங்குடியின உணர்வையும் அடையாளத்தையும் வலுப்படுத்தினார் என்று தெரிவித்தார். கார்த்திக் ஓரன் தமது வாழ்நாளை பழங்குடியின சமூகத்தின் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார் என்று அவர் கூறினார். அவர் கல்வியை பரப்புவதிலும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் பாடுபட்டார் என்று அவர் தெரிவித்தார். அவருடைய குறிக்கோள்களைப் பின்பற்றி, சமூகம் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பணியாற்றுவோம் என்று நாம் உறுதி ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த சிறந்த பழங்குடியின வீரர்களின் பட்டியல் மிகவும் நீளமானது என்று அவர் குறிப்பிட்டார். பழங்குடியினர் அருங்காட்சியகங்களை நிறுவுவதன் மூலம், அவர்களின் வீரக் கதைகளை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். எனினும், இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த மற்றும் இதர அனைத்துப் பிராந்தியங்களைச் சேர்ந்த பழங்குடியின வீரர்களின் பங்களிப்புகள், நாட்டின் இளைஞர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் அறியச் செய்வதை உறுதி செய்வது, பழங்குடியின சமூகத்தின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய அனைத்து தனிநபர் மற்றும் நிறுவனத்தின் பொறுப்பாகும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.




கருத்துகள்