தேசிய தகவல் தொடர்பு அகாடமியின் நிதிப்பிரிவு சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு அடிப்படை பாடத்திட்டத்தின் நிறைவு விழாவில் மத்திய இணையமைச்சர் திரு சந்திர சேகர் பெம்மசானி பங்கேற்பு
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் செயல்படும், 5 நட்சத்திர தரமதிப்பீடு பெற்ற மத்திய பயிற்சி நிறுவனமான தேசிய தகவல் தொடர்பு அகாடமியின் நிதிப் பிரிவு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் இன்று (டிசம்பர் 6, 2025), நடைபெற்ற இந்த ஆண்டுக்கான (2025) சிறப்பு அடிப்படை பாடத்திட்ட நிறைவு விழாவில், மத்திய இணையமைச்சர் திரு சந்திர சேகர் பெம்மசானி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சிறப்பு அடிப்படைப் பாடத்திட்ட வகுப்புகள், முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக அகாடமியுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 15 முதல் டிசம்பர் 5 வரை நடத்தப்பட்டது. இதில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 அகில இந்திய, மத்திய குடிமைப் பணி பிரிவுகளைச் சேர்ந்த 176 பயிற்சி அதிகாரிகள் பங்கேற்றனர். இளம் அரசு ஊழியர்களை இந்தியாவின் நிர்வாக, சமூக-பொருளாதார, அரசியல் சூழலுக்கு ஏற்ப வழிநடத்தவும், சேவையில் மன உறுதியை வளர்க்கவும் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம், பல்வேறு அமர்வுகள் மூலம் பல்வேறு துறைகளில் கற்றலுக்கான தளத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. அதே வேளையில், ஒழுக்கம், நெறிமுறைகள், தொழில்முறை அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த பாடத்திட்டம் கல்வி அறிவை அனுபவக் கற்றலுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வி நடவடிக்கைகளைத் தாண்டி விளையாட்டுகள், கலாச்சார நிகழ்வுகள் ஆகியவற்றிலும் பயிற்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த விழாவில், லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக அகாடமியின் இயக்குநர் திரு ஸ்ரீராம் தரணிகாந்தி, தகவல் தொடர்புத் துறையின் கணக்குகள் பிரிவுக் கட்டுப்பாட்டாளர் திருமதி வந்தனா குப்தா, தேசிய தகவல் தொடர்பு அகாடமியின் நிதிப் பிரிவு தலைமை இயக்குநர் திருமதி மாதவி தாஸ் உள்ளிட்ட பிற துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திரு சந்திரசேகர் பெம்மசானி, பயிற்சி அதிகாரிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் நிபுணர்களாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினார். பொது சேவையில் சிறந்த திறனுடன் செயல்படுவதே நம்பகத்தன்மையை உருவாக்குகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். குழுப்பணியின் மதிப்பை எடுத்துரைத்த அவர், ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளை ஊக்குவித்தார். நாட்டின் 140 கோடி மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு, மிகப்பெரிய பரிசாக அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது என்று திரு சந்திரசேகர் பெம்மசானி குறிப்பிட்டார்.





கருத்துகள்