வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம் சட்டம் தற்சார்பு கிராமங்களுக்கு அடித்தளம் அமைக்கிறது: ஈரோட்டில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுடனான கலந்துரையாடலில் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பேச்சு
தொழிலாளர்களுக்கான நிதியை எவரும் முறைகேடு செய்ய முடியாது: மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் உறுதி
ஈரோட்டில் மஞ்சள் தரப்பரிசோதனை ஆய்வகம் அமைக்க இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ICAR) உத்தரவு
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், ஈரோட்டில் விவசாயத் தொழிலாளர்களிடம் பேசுகையில், ‘விக்சித் பாரத் – ஜி ராம் ஜி’ (Viksit Bharat – G Ram G) சட்டம் தற்சார்பு கிராமங்களை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று தெரிவித்தார். இந்த லட்சியத் திட்டத்தின் பல்வேறு அம்சங்களையும் அமைச்சர் விளக்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தவும், கிராமங்களில் தற்சார்பு நிலையை ஊக்குவிக்கவும் இச்சட்டம் ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாகும் என்று அவர் கூறினார். பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே வளர்ச்சியடைந்த மற்றும் வளமான கிராமங்கள் என்ற இலக்கை அடைய முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
முந்தைய திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 100 நாட்கள் வேலை உத்தரவாதத்தை வழங்கியது, ஆனால் பல இடங்களில் வேலை சரியான நேரத்தில் கிடைக்கவில்லை அல்லது ஊதியம் உடனுக்குடன் வழங்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் கூறினார். இது ஒரு கவலைக்குரிய விஷயம் என்று தெரிவித்த அவர், இத்தகைய குறைபாடுகளைக் களையவும், ஊழலை ஒழிக்கவும், அரசு புதிய 'விக்சித் பாரத் – ஜி ராம் ஜி' சட்டத்தின் மூலம் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது என்றார்.
புதிய சட்டத்தின் கீழ், வேலைவாய்ப்புக்கான உறுதி 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வேலை வழங்கப்படாவிட்டால், தொழிலாளர்கள் வேலையின்மை உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் ஆவர். அதேபோல், ஊதியம் வழங்குவதில் 15 நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால், அதற்கு வட்டியும் வழங்கப்படும். களப்பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்யவும், அமைப்பு முறையை மேம்படுத்த நிர்வாகச் செலவுகள் 6 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக திரு சவுகான் கூறினார்.
புதிய சட்டத்தின் கீழ் கிராம சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், தங்கள் கிராமங்களில் என்னென்ன வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை கிராம சபைகளே இனி தீர்மானிக்கும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். வளர்ச்சி தொடர்பான முடிவுகள் இனி சென்னையில் அல்லது டெல்லியில் எடுக்கப்படாது, அந்தந்த கிராமங்களிலேயே எடுக்கப்படும் என்பதை திரு சவுகான் தெளிவுபடுத்தினார்.
இத்திட்டம் குறித்து சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தொழிலாளர்களுக்கான ஊதியம் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும், ஊழலுக்கு இடமில்லாமல் செய்யவும் பிரதமர் திரு நரேந்திர மோடி இத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார் என்றார்.
அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் ஈரோட்டில் உள்ள புகழ்பெற்ற மஞ்சள் சந்தையைப் பார்வையிட்டு, மஞ்சள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் வணிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது 'மஞ்சள் மாநகரம்' என்று அழைக்கப்படும் ஈரோட்டில் மஞ்சள் தரப்பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்படும் என்று அறிவித்ததோடு, இது தொடர்பாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ICAR) தேவையான உத்தரவுகளையும் பிறப்பித்தார். இந்த வசதி தரப்பரிசோதனை, சான்றளிப்பு மற்றும் மஞ்சளைச் சிறப்பாக சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஈரோட்டில் மஞ்சள் வாரியத்தின் (Turmeric Board) மண்டல அலுவலகத்தை நிறுவவும் மத்திய அமைச்சர் உறுதி அளித்தார். இது வர்த்தக அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டாலும், வேளாண் அமைச்சர் என்ற முறையில் இதற்கான முன்னெடுப்புகளை தனிப்பட்ட முறையில் மேற்கொள்வதாக அவர் கூறினார். இதன் மூலம் மஞ்சள் விவசாயிகளுக்கு கொள்கை ரீதியான ஆதரவு, மேம்பட்ட சந்தை அணுகல் மற்றும் புதிய ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
ஈரோடு பகுதியில் குளிர்சாதனக் கிடங்கு வசதிகளின் அவசியம் மிகவும் முக்கியமானது என்று திரு சவுகான் குறிப்பிட்டார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் குளிர்சாதனக் கிடங்குகளை நிறுவ முடியும் என்றும், இதற்கு ராஷ்டிரிய கிருஷி விகாஸ் திட்டத்தின் (RKVY) நிதியைப் பயன்படுத்துமாறு தமிழக அரசிடம் கேட்டுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மஞ்சள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண தில்லியில் கூட்டம் நடத்தப்படும் என்றார். தரமான விதைகளே விவசாயத்தின் அடிப்படை என்பதை வலியுறுத்திய அவர் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மூலம் விதை மேம்பாட்டின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் ஆய்வு செய்தார். விவசாயப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட அரங்குகளைப் பார்வையிட்ட அவர், பொருட்களின் தரம் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருடன் உரையாடினார். திரு. சவுகான் 1,000-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகளுடன் கலந்துரையாடியதுடன், பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளையும் சந்தித்தார். மேலும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார்.





கருத்துகள்