இந்திய ரயில்வேயின் புத்தாண்டு பரிசு: குவஹாத்தி-ஹவுரா இடையே முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை விரைவில் தொடங்கும்
புது தில்லி ரயில் பவனில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். அசாமின் குவஹாத்திக்கும் மேற்கு வங்கத்தின் ஹவுராவிற்கும் இடையே முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படும் என்று அவர் அறிவித்தார். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முழுமையான சோதனை மற்றும் சான்றளிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார். ஜனவரி மாதத்தில், இந்த வழித்தடத்தில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிளின் மூலம் அசாம் மாநிலத்தில் உள்ள காம்ரூப் பெருநகரம் மற்றும் போங்கைகான் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கூச்பெஹார், ஜல்பைகுரி, மால்டா, முர்ஷிதாபாத், பூர்பா பர்தாமன், ஹூக்ளி மற்றும் ஹவுரா ஆகிய மாவட்டங்கள் பயனடையும். இந்த ரயிலில் 16 பெட்டிகள் இருக்கும், இதில் 11 மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள், 4 இரண்டு அடுக்கு ஏசி பெட்டிகள் மற்றும் 1 முதல் வகுப்பு ஏசி பெட்டி ஆகியவை அடங்கும். மொத்தம் சுமார் 823 பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க முடியும்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இரவு நேரப் பயணங்களுக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் உயர்தர பயண அனுபவத்தை வழங்கும். மாலையில் அதன் தொடக்க இடத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலையில் அதன் இலக்கை அடையும் வகையில் இந்த ரயிலின் சேவை திட்டமிடப்படும்.








கருத்துகள்