பாறை வெடிப்புப் படக்காட்சிகள் படமாக்க வந்த படப்பிடிப்பு குழுவினரை சிறை பிடித்த மக்கள்.
பொக்லைன், கிரேன், கம்ப்ரசர், கேரவன், சொகுசு பேருந்துகள், சிற்றூந்துகள் மற்றும் வெளிப்புறப் படப்பிடிப்பு வாகனங்கள், என 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டி கிராமத்திற்கு வந்தன. அங்கு பாறைகளை வெடிவைத்து தகர்த்து வெடித்து சிதறும் வகையிலான சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்கு படப்பிடிப்புக் குழுவினர் தயாராகினர். அதற்காக வெடி பொருட்கள், மண்எண்ணெய் கேன்கள் கொண்டு வந்து, படக்குழுவினர் சில ஏற்பாடுகளை ஸ்பெஷல் எஃபெக்ட் செய்திருந்தனர் இதை அந்த வழியாக விவசாயப் பணிகளுக்காக சென்ற உள்ளூர் மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அரிட்டாபட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்தனர் அதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நடந்த பகுதிக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் படப்பிடிப்புக் குழுவினரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்தவும் அவர்களை பொதுமக்கள் அனுமதிக்கவில்லை. அப்போது படக்குழுவினர், மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்றே படப்பிடிப்பு நடத்துவதாக தெரிவித்தனர்.
அதனை ஏற்க மறுத்த அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் கிராம மக்கள், பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்பு ஸ்தலத்தில் பாறைகளுக்கு வெடிவைத்து தகர்ப்பது போல் படம் எடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதுடன் அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக கேள்விகளை எழுப்பியபடி இருந்தனர். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்துக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த ஒரு கான்ஸ்டபிள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திரைப்படப் படப்பிடிப்புக் குழுவினரை மீட்டனர். பின்னர் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். டங்ஸ்டன் சுரங்க பயம் உள்ள பிரச்சினையால் அரிட்டாபட்டி பகுதியில் பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்தி வரும் நிலையில், பதற்றமான நிலை இருந்து வருகிறது. தற்போது திரைப்படப் படப்பிடிப்பு எனக் கூறி வெடி பொருட்களுடன் பல்வேறு வாகனங்களில் குவிந்தது மேலும் அவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியது
இது சுற்று வட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பொதுமக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததால், இயக்குனர் முத்தையா படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்தார். கொம்பன் முத்தையா இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, மதுரையில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு நடத்த பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், படப்பிடிப்பு பாதியில் ரத்து செய்யப்பட்டது.
நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப்புலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கொம்பன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு பெரிய வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில், அடுத்து நடிகர் விஷால் நடிப்பில் மருது, நடிகர் சசிகுமார் நடிப்பில் கொடிவீரன், நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் தேவராட்டம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார்.
மேலும், விக்ரம் பிரபு நடிப்பில் அவர் இயக்கிய புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சி. மூலம் ஒளிபரப்பானது. இதனையடுத்து தனது மகனை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ள முத்தையா, அடுத்ததாக நடிகர் அருள்நிதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், மதுரை அரிட்டாபட்டியில் படப்பிடிப்பு நடத்த வந்த நிலையில் மக்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.
ஏற்கனவே அந்தப் பகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும், பாதுகாக்கப்பட்ட பல்லூயிர் மண்டலம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனிடையே, முத்தையா தனது படப்பிடிப்புக்காக அந்த பகுதியில், வெடி பொருட்கள், மற்றும் ராட்சத கிரேன்கள் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளார்.
வெடிகுண்டு வெடிக்கும் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளை படமாக்க இருந்ததாக தகவல் வெளியாகியது. இதைப் பார்த்த பொதுமக்கள், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக தான் இவர்கள் வந்திருக்கிறார்கள் என எண்ணி, எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் படப்பிடிப்புக்குழுவினரை சிறைபிடித்த பொதுமக்கள், இந்த இடத்தில் திரைப்படப் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்றும், உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேசி சமாதானம் செய்ததை தொடர்ந்து, படக்குழுவினர் விடுவிக்கப்பட்ட நிலையில், மக்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்த இயக்குனர் முத்தையா, அங்கு நடக்க இருந்த படபடிபபிடிப்பை ரத்து செய்து, திரும்பினார்.
கருத்துகள்