செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தாக்கம் குறித்த மாநாட்டை உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் மத்திய இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா நாளை (17.10.2025) தொடங்கி வைக்கிறார்
இந்திய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப இயக்கம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து உத்தராகண்ட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மாநாடு -2025-ஐ உத்தராகண்ட் மாநில அரசு இம்மாதம் 17-ம் தேதி டேராடூனில் நடத்துகிறது.
அடுத்த ஆண்டு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 19,20 தேதிகளில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உச்சிமாநாடு 2026 முன்னோட்டமாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
டேராடூனில் நடைபெறும் மத்திய இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா பங்கேற்கும் இந்த மாநாட்டில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும், உத்தாரகண்ட் மாநில அரசு அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனிதநேயம், வளர்ச்சியை உள்ளடக்கிய சேவைகளுக்கு இந்த தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அளவில் ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்படவுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தின் நீடித்த வளர்ச்சிக்கும், டிஜிட்டல் முறையிலான நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து கொள்கை வகுப்பாளர்கள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் விரிவாக எடுத்துரைக்கவுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக உருவெடுக்கச் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இம்மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செயலிகள் தொழில் முனைவுக்கான முன் முயற்சிகள் ஆகியவை இந்த மாநாட்டில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.



கருத்துகள்