மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகங்களின் முக்கிய முன்முயற்சிகள் பற்றி குடியரசு துணைத் தலைவர் கேட்டறிந்தார்
மத்திய ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் திரு ஜித்தின் பிரசாதா ஆகியோர் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, நாட்டின் தகவல் தொடர்பு சூழலியலை வலுப்படுத்தி, இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை இயக்குவதை நோக்கமாகக் கொண்டு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகங்களின் முக்கியமான முன்முயற்சிகள், சாதனைகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் பற்றி குடியரசு துணைத் தலைவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
டிஜிட்டல் துறையில் அதிகாரம் அளிக்கப்பட்ட, புதுமைகளால் இயக்கப்படும், தகவல் குறித்த போதிய விழிப்புணர்வு பெற்ற சமூகத்தை கட்டமைப்பதில் இரண்டு அமைச்சகங்களின் பங்களிப்புகளை குடியரசு துணைத் தலைவர் வெகுவாகப் பாராட்டினார். இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை வளர்ந்து வரும் மென்பொருள் மற்றும் புத்தாக்க மையங்களாக மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சமூக ஊடகங்களை பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவது மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் புதுமைகளை ஊக்குவிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் அடிக்கோடிட்டு காட்டினார்.


கருத்துகள்