இலங்கைப் பிரதமராக பதவியேற்றபின் முதல்முறையாக இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹரிணி அமரசூா்யா இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனைகள் மேற்கொண்டாா்.
இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கை மண்ணிலிருந்து மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டு பிரதமா் ஹரிணி அமரசூா்யா தெரிவித்தாா்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்த ஹரிணி அமரசூா்யா டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஹிந்து கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினாா். இவா் இந்தக் கல்லூரியில்1994- ல் சமூகவியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசுகையில் "கடும் பொருளாதாரச் சிக்கலில் இலங்கை தவித்தபோது இருண்ட காலத்தில் உதவிசெய்யும் உற்ற நண்பராக இந்தியா மேற்கொண்ட உதவிகளை மறக்க இயலாது.
நம்மைப் போன்ற சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்படும் பொதுக் கல்வியானது நாட்டின் உயா்பதவிகளை அடைய வழிவகுப்பதே இலங்கை மற்றும் இந்திய ஜனநாயகத்தின் அழகு. இருநாடுகளுக்கும் இடையே நீண்ட பாரம்பரியம் மற்றும் கலாசார உறவும் பரஸ்பர மரியாதையும் உள்ளது.
சில விவகாரங்களில் முரண்பாடுகள் இருப்பினும் இருநாடுகளும் எப்போதும் ஒரே குடும்பமாகவே இருந்து வருகின்றன. எனவே, இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கை மண்ணிலிருந்து மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது நாடுகளுக்கு இடையில் எப்போதும் பாலங்களை கட்டுங்கள்; தடைகளை உருவாக்காதீா்கள்" என்றவர் மேலும் "இலங்கையில் நடந்த அதிபர் மற்றும் பார்லிமெண்ட் தேர்தல்கள் முன்னேற்றத்தை நோக்கிய நாட்டுக்கு தெளிவான பயணத்தை கொடுத்தது. எங்களது கடன் திட்டங்களை மறுசீரமைத்துள்ளோம். பொது கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கி வருகிறோம். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா எப்போதும் நின்றுள்ளது. இந்தியா உடனான நட்பு வலுவடைந்து வருகிறது. சர்வதேச உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.தலைவர்களாக நாம் எடுக்கும் இந்த ரிஸ்க் தான் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக உணர வைக்கும். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். கோவிட்டுக்கு பிறகு இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்னைகள் எழுந்தன. ஆனால் மக்களின் நம்பிக்கை மட்டுமே பிராகசித்தது" என்றார்









கருத்துகள்