மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத துணைக்காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்துக்கு எதிராகப் பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிமன்றம், அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு .
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் தாலுகா மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான நகை திருட்டு புகார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, தனிப்படைக் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தது தொடர்பாக தனிப்படைக் காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், இராமச்சந்திரன் ஆகியோரை CBI கைது செய்த வழக்கில் நீதிமன்றத்தில் CBI தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் காவல் மரணம் நிகழ்ந்தபோது, மானாமதுரை துணைக் கண்காணிப்பாளராக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோர் எதிரிகளாகச் சேர்க்கப்பட்ட வழக்கில் சண்முகசுந்தரம் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனு இரண்டு முறை தள்ளுபடியானது. தனிப்படைக் காவலர்கள் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரிக்கவும், வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்துக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்துள்ள நீதிமன்றம், அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அசன் அலி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது, துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தவிர்த்து, காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோர் ஆஜராகினர்.
ஆனால் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமறைவாக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு எதிராகப் பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி, அவரைக் கைது செய்து நாளை டிசம்பர் மாதம் .26 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு CBI க்கு உத்தரவிட்டார். மேலும், ரமேஷ்குமார், சிவக்குமார், இளையராஜா ஆகியோரும் நாளை ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.




கருத்துகள்