நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில் ஓட்டுநர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்
நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் ரயில் ஓட்டுநர்களின் பணி நிலைமையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) ரயில்வே குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் ஆவர். கடந்த பத்து ஆண்டுகளில் ரயில் ஓட்டுநர்களின் பணி நிலைமைகளில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயில் ஓட்டுநர்கள் ஒரு பயணத்தை முடித்ததும், அவர்கள் தலைமையகத்திற்கு வெளியே இருந்தால் ஓய்வெடுக்க சிறப்பு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2014-ம் ஆண்டுக்கு முன்பு, ரயில்வே ஓய்வு அறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. தற்போது இந்த அறைகள் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து 558 ஓய்வு அறைகளும் இப்போது குளிரூட்டப்பட்டுள்ளன.
பல ஓய்வு அறைகளில், பாதத்திற்கான தசைப்பயிற்சி வழங்கப்படுகிறது. ரயில் ஓட்டுநர்களின் பணி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் சிலர் இதனை விமர்சித்து வருகின்றனர்.
ரயில் ஓட்டுநர்கள் என்ஜின்களை இயக்குகிறார்கள். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஓட்டுநர் அறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. 2014-ம் ஆண்டுக்கு பின்பு ரயில்களில் ஓட்டுநர் அறைகள் சிறந்த இருக்கைகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 7,000-க்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநர் அறைகள் குளிரூட்டப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட ஓட்டுநர் அறைகளுடன் தற்போது புதிய என்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன.
ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம் கவனமாக கண்காணிக்கப்படுகிறது. பயணங்களுக்குப் பிறகு ஓய்வு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சராசரி பணி நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருந்தது.
கடந்த சில ஆண்டுகளில், ரயில்வே ஆட்சேர்ப்பு அதிகரிக்கப்பட்டு, 34,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 18,000 ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது.
போலி தகவல்கள் மூலம் ரயில்வே குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடையும். ஒட்டுமொத்த ரயில்வே குழுவும் நாட்டுக்கு சேவை செய்வதில் இணைந்து செயல்படுகிறது.”
கருத்துகள்