சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் செந்தில் குமார், அருள் முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
உச்ச நீதிமன்றம் மற்றும் நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் வழங்கி வருகிறது.
அதன் கூட்டம், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் நடந்ததில், ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களாக பணியாற்றும் ஜியா லால் பரத்வாஜ், ரொமேஷ் வர்மா ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்கவும்; கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நீதித் துறை உயர் அலுவலர்களான கீதா கடபா பாரதராஜ செட்டி, முரளிதர பாய் போர்கட்டே, தியாகராஜ நாராயண் இனாவல்லி ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், கர்நாடக மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றும் நீதிபதி குருபரஹள்ளி வெங்கடராமரெட்டி அரவிந்தை நிரந்தர நீதிபதியாகவும்; திரிபுரா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றும் நீதிபதி பிஸ்வஜித் பாலித்தை நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.
இதே போல், சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் செந்தில் குமார், அருள் முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரைத்தது.நீதிபதி செந்தில்குமார் சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் 1994ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்துள்ளார். நீதிபதி அருள் முருகனும் சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து 1999ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்