மே மாதம் 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் இளநிலை 2026 நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவையடுத்து தேசியத் தேர்வு முகமையான என்.டி.ஏ ரத்து செய்துள்ளது.
மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின் இத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக என்.டி.ஏ தெரிவித்தது.
இத் தேர்வு மீண்டும் நடத்தப்படும் எனவும் புதிய தேர்வுத் தேதிகள் மற்றும் ஹால் டிக்கெட் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என என்.டி.ஏ கூறியது.
ராஜஸ்தானில் மே மாதம் 10-ஆம் தேதி வினாத்தாள் கசிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. மருத்துவப் படிப்பிற்காக நடத்தப்பட்ட இத் தேர்வில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் இனி மீண்டும் தேர்வு எழுத வேண்டும். இருப்பினும், இதற்காகத் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.
தேசியத் தேர்வு முகமை தனது அதிகாரப்பூர்வ 'X' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த விவகாரத்தை முழுமையாக விசாரணை செய்ய சிபிஐ-யிடம் ஒப்படைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்கு என்.டி.ஏ முழு ஒத்துழைப்பு வழங்கும்; தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் விசாரணை அமைப்பிடம் சமர்ப்பிக்கும்," எனக் குறிப்பிட்டுள்ளது. நீட் வினாத்தாள் ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் கசிந்ததாகப் பல செய்திகள் கூறுகின்றன.
ஊடகத் தகவல்களின்படி, ராஜஸ்தான் சிறப்பு அதிரடிப்படை நடத்திய முதற்கட்ட விசாரணையில் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில், வினாத்தாளின் பிடிஎஃப் கோப்பு ஒன்று கேரளாவிலிருந்து ராஜஸ்தானின் சீக்கர் பகுதிக்குப் பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம், "அரசாங்கம் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடனேயே அரசு தேர்வை ரத்து செய்துவிட்டு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது," என்றார்.
மேலும் அவர், "வினாத்தாளின் 320 கேள்விகளில் 120 கேள்விகள் கசிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கேரளா அல்லது சீக்கர் (ராஜஸ்தான்) என எங்கிருந்தாலும் சரி, குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தை அரசு மறைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், உடனடியாகத் தேர்வை ரத்து செய்து சிபிஐ விசாரணை தொடங்கப்பட்டது," என்றார்.





கருத்துகள்