கோயமுத்தூரில் ஈமு கோழி
ப் பண்ணை நடத்தி ரூபாய் .2.37 கோடியை மோசடி செய்த வழக்கில் இருவருக்கு தலா பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவு.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள பெரியமணலி பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஈமுக்கோழிப் பண்ணையை சந்திரசேகரன் (வயது 48), சோமசுந்தரம் (வயது 55) ஆகியோர் நடத்தி வந்த நிலையில் வாடிக்கையாளர்களை ஏமாற்ற இவர்கள் அறிவித்த கவர்ச்சித் திட்டங்களை நம்பி, நூற்றுக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு லாபத் தொகையை பங்கிட்டுக் கொடுக்கவில்லை. அதற்கு அரசு மற்றும் செபி மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதிகளைப் பெறவில்லை முதலீடு செய்த பணத்தையும் திரும்பத் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவினரிடம் புகார் அளித்தனர். விசாரணையில், மொத்தம் 115 பேரிடம் ரூபாய் .2 கோடியே 37 லட்சத்து 98 ஆயிரம் வசூலித்து இவர்கள் மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து, பண்ணை உரிமையாளர்கள் சந்திரசேகரன், சோமசுந்தரம், காசாளர் அமுதா, பங்குதாரர்கள் இராமகிருஷ்ணன், ஆனந்தன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
கோயமுத்தூர் டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், நேற்று முன்தினம் நீதிபதி செந்தில் குமார் தீர்ப்பளித்ததில், குற்றவாளிகளின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் சந்திரசேகரன், சோமசுந்தரம் ஆகியோருக்கு தலா பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும் ரூபாய் .1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மற்ற மூவரும் விடுவிக்கப்பட்டனர்.



கருத்துகள்