பஞ்சாயத்து அமைப்புகள் மூலம், குடிமக்கள் சார்ந்த சேவைகளை வழங்கலை மேம்படுத்துவதற்கான மண்டலப் பயிலரங்கு
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில், சேவையிலிருந்து வளமை என்ற தலைப்பில் பஞ்சாயத்து அமைப்புகள் மூலம், சேவை வழங்குதல் குறித்த மண்டலப் பயிலரங்கை இன்று நடத்தியது. ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு. மனோஜ் சின்ஹா இந்தப் பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஜம்மு-காஷ்மீர் அரசின் ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு. ஜாவீத் அகமது தார், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு. விவேக் பரத்வாஜ், பிற உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுச் சேவை மையம், ஜம்மு-காஷ்மீர் அரசின் ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கில், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நிர்வாகிகள், கிராம அளவிலான தொழில்முனைவோர், உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தப் பயிலரங்கில் உரையாற்றிய ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு. மனோஜ் சின்ஹா, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் அடிப்படை அளவிலான வளர்ச்சி, மக்கள் சார்ந்த நிர்வாகம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் சக்திவாய்ந்த கருவிகளாக உருவெடுத்துள்ளன என்று கூறினார். நிதி, பணிகள், பணியாளர்கள் ஆகியவற்றைத் திறம்படப் பகிர்ந்தளித்தல், பங்கேற்புத் திட்டமிடல், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அதிக அதிகாரமளித்தல் ஆகியவற்றின் மூலம் ஜம்மு-காஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் வலுப்படுத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.


கருத்துகள்