நித்தி ஆயோக் வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் நடைபெற்ற நிதி ஆயோக் கலந்துரையாடல் கூட்டம்
நிதி ஆயோக் துணைத் தலைவர் திரு அசோக் லஹிரி தலைமையில் வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று (2026 ஜூன் 12) நடைபெற்றது. இதில் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களின் முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் பங்கேற்று வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.
அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு பேசுகையில், தங்களது மாநிலத்தின் நீர்மின் ஆற்றல் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வ சர்மா, பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைத் குறைக்க உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்றார். மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் கே சங்மா, பொருளாதார வளர்ச்சி மனித மேம்பாடாக மாற வேண்டும் எனக் குறிப்பிட்டு, ‘மாற்றத்திற்கான பயணம் 2032’ என்ற தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொண்டார்.
மிசோரம் முதலமைச்சர் திரு லால்டுஹோமா, சுயஉதவிக் குழுக்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகக் கூறினார். நாகாலாந்து முதலமைச்சர் திரு நெஃபியு ரியோ, உள்கட்டமைப்புத் திட்டங்கள், காபி போன்ற பொருட்களுக்கான உலகளாவிய சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தக் கோரிக்கை விடுத்தார். மணிப்பூர் முதலமைச்சர் திரு கெம்சந்த் சிங், மறுவாழ்வு, மறுகுடியேற்றப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணிப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார். சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங், விமானப் போக்குவரத்து, டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்தக் கோரிக்கை விடுத்தார். திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, திறன் மேம்பாடு, எல்லைப்புற வர்த்தக உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அமைச்சகங்களுடன் இணைந்து நிதி ஆயோக் தொடர்ந்து பாடுபடும் என இக்கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.
கருத்துகள்