PMAY(G) வீடு வழங்கும் திட்டத்தில் ஊழல் முறைகேடு? உரிய அலுவலர்கள் உள்பட 12 பேர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு!
தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் பழங்கோட்டை ஊராட்சியில், மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமப்புற) PMAY(G) வீடு வழங்கும் திட்டத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்ப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை நடவடிக்கை அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசு அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் என மொத்தம் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தகுதியற்ற நபர்களைப் பயனாளிகளாகத் தேர்வு செய்தல், அரசு நிதியை விதிமுறைகளுக்கு புறம்பாக வழங்குதல், ஆவணங்களில் தவறான தகவல்களை பதிவு செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏழை மற்றும் வீடற்ற மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மத்திய அரசின் நலத்திட்டத்தில் முறைகேடு நடந்ததாக வெளிவந்த தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுபோல பல ஊராட்சி மன்றங்களில் தவறுகள் நடந்துள்ளது ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் பேரம் பேசி பஞ்சாயத்து யூனியன் அளவில் லஞ்சம் பெறப்பட்ட சம்பவங்கள் உண்டு இனி அவை குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.










கருத்துகள்