ஆன்மீகம், பாரம்பரியம், வர்த்தகம், கலாச்சாரம், வாழ்க்கை முறை,மொழி ஆகியவற்றின் சங்கமம்தான் காசி தமிழ்சங்கமம்: துக்ளக் எஸ். குருமூர்த்தி கருத்து
ஆன்மீகமும், வர்த்தகமும், கலாச்சாரமும், பாரம்பரியமும், வாழ்க்கை முறையும், மொழியும் இணைந்த ஒரு சங்கமம்தான் காசி தமிழ் சங்கமம் கணக்கு தணிக்கையாளர் துக்ளக் எஸ் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமத்தையொட்டி, காசி தமிழ்நாடு வணிக பாடம் எனும் வர்த்தக இணைப்புக்கான ஒருநாள் மாநாடு காசியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தக தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் குருமூர்த்தி தலைமை விருந்தினராக பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டுக்கு இடையே பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு பேட்டியளித்த துக்ளக் இதழ் எஸ் குருமூர்த்தி, தமிழகத்தின் காஞ்சிப்பட்டு எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளதோ, எந்த அளவுக்கு வளர்ச்சியை எட்டியுள்ளதோ அதன் பிரதிபலிப்பை பனாரஸ் (காசி) பட்டில் காண முடிகிறது என்றார்.
இந்தியா ஆன்மீகத்தால் மட்டும் பிணைக்கப்பட்ட நாடு அல்ல; வர்த்தகத்தால், பழக்கவழக்கங்களால், போக்குவரத்தால் பிணைக்கப்பட்ட நாடாகும். இந்த தன்மையை மனதில் கொண்டு கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் என்று பாரதியார் பாடினார் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படையாக இருப்பது கங்கை நதி என்று மகாத்மா காந்தி 1909-ல் இந்து ஸ்வராஜ் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் கங்கை இருக்க வேண்டும், இருக்கிறது; கங்கையில் நீராடுகிறோம், கங்கை நீரை அருந்துகிறோம் என்ற எண்ணம் மக்களிடம் இருப்பதால்தான் ஒற்றுமையாக இருக்கிறார்கள். மொழிகளும், பழக்க வழக்கங்களும் வேறு வேறாக இருப்பினும், தங்களுக்குள் ஒற்றுமை இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள் என அந்த நூலில் காந்தி எழுதியுள்ளார் என்றும், இதனை தற்போது காசியில் காண முடிகிறது என்றும் துக்ளக் குருமூர்த்தி கூறினார்.
காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை; ஆன்மீகம் இருக்கிறது, தொன்மையான கலாச்சாரத்துடன் நாட்டை காசி பிணைத்திருப்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் காசிக்கு வர வேண்டும் என்று விரும்புவது இயற்கைதான் என்று அவர் குறிப்பிட்டார். இந்த விருப்பத்தை நிறைவேற்ற மிக குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக காசி தமிழ் சங்கமம் நிகழ்வை திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுக்குரியவர் என்று துக்ளக் குருமூர்த்தி தெரிவித்தார்.
கருத்துகள்