பொற்பனைக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி துவக்கம்:
காணொலியில் தமிழ்நாடு முதல்வர் துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, சங்க கால வரலாற்று சின்னங்களை உள்ளடக்கிய பகுதியாகும் கோட்டை சுவர், அரண்மனைத் திடல் போன்ற இடங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் சார்பில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றது. அகழாய்வுப் பணி இயக்குநர் தங்கதுரை தலைமையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வில் ஈடுபட்ட போது கிடைக்கப்பெற்ற தங்க மூக்குத்தி, எலும்பு முனைக் கருவி, பாசி மணி, பல விதமான பானை ஓடுகள் உள்ளிட்ட தொல் பொருட்கள் குறித்த விரிவான அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிக்கும் அனுமதி கோரப்பட்டது.
மேலும், அகழாய்வுப் பணிக்கு புதிதாக இடங்கள் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிக்கு அரசு அனுமதியளித்தது. அகழாய்வுப் பணிகளை சென்னையிலிருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இன்ற தொடங்கி வைத்தார்.
பொற்பனைக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்