சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஸோஜிலா சுரங்கப்பாதை திட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் எட்டப்பட்டது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பெருமிதம்
கார்கில் மாவட்டத்தில் உள்ள மினாமோர்க்கில், ஸோஜிலா சுரங்கப்பாதையின் முதன்மைச் சுரங்கப் பாதையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று நேரில் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் ரூ. 6,800 கோடி மதிப்பீட்டில், பால்டல் மற்றும் மினாமோர்க் இடையே சுமார் 14 கி.மீ நீளத்தில் கட்டப்படும் இந்த இருவழிச் சுரங்கப்பாதை, இந்தியாவின் மிக முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டமாகும். கடுமையான பனிப்பொழிவு மற்றும் கடினமான புவியியல் சூழல்களையும் தாண்டி இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. நவீன காற்றோட்டம், தீயணைப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு போன்ற மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் இந்தச் சுரங்கம் அமைகிறது.
இந்தத் திட்டம் சோனமார்க் மற்றும் மினாமோர்க் இடையிலான பயண நேரத்தை 2 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாகக் குறைக்கும். இது அப்பகுதியின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும். மேலும், இந்திய ராணுவத்தின் தளவாடங்கள் மற்றும் படைகளை ஆண்டு முழுவதும் விரைவாகக் கொண்டு செல்ல இது பெரிதும் உதவும்.
இது தவிர, லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் ரூ. 18,000 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களும், ஜம்மு-காஷ்மீரில் மட்டும் சுமார் ரூ. 1.35 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார். மனாலி-லே அச்சில் பாரலாச்சா லா, லாச்சுலுங் லா போன்ற இடங்களில் புதிய சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது லடாக்கின் இணைப்பை முழுமையானதாக மாற்றும்.






கருத்துகள்