காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஆய்வு - தில்லியில் சாலைகள் தரநிலைகளுக்கு இணக்கமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
தேசிய தலைநகர் பிராந்தியம் தில்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், காற்றுத் தர மேலாண்மை ஆணையம், 'ஆபரேஷன் கிளீன் ஏர்' திட்டத்தின் கீழ் 08.07.2026 அன்று ஒரு சிறப்பு ஆய்வு இயக்கத்தை நடத்தியது. இந்த ஆய்வின் போது, தில்லி மாநகராட்சியின் (MCD) அதிகார வரம்பிற்குட்பட்ட 79 சாலைப் பகுதிகளில் 78 சாலைகளில், ஒரு முனை முதல் மறு முனை வரை தார் போடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது, ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளது.
07.01.2025 அன்று ஆணையத்தால் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்ட, தில்லி பகுதியில் நகர்ப்புற சாலைகளை அமைத்தல், பசுமையாக்குவது ஆகியவற்றுக்கான தரநிலைக் கட்டமைப்புக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட சாலை மறுசீரமைப்புப் பணிகளின் நிலையை மதிப்பிடுவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுப் பணிக்காக, தில்லி மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்ட சாலைப் பகுதிகளை ஆய்வு செய்ய, ஆணையத்தின் 10 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த ஆய்வானது, தில்லியின் பல்வேறு பகுதிகளில் சுமார் 13 கிலோமீட்டர் நீளமுள்ள 79 சாலைப் பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்தது.
ஆய்வின் போது, பரிசோதிக்கப்பட்ட 79 சாலைப் பகுதிகளில் 78-ல் முழு நீளத்திற்கும் தார் போடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மீதமுள்ள ஒரு சாலைப் பகுதியில், சாலை கட்டுமான, புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவது கண்டறியப்பட்டது.
சாலைத் தூசியைத் தணிப்பதற்கு, தில்லி முழுவதும் தரநிலைக் கட்டமைப்பைச் செயல்படுத்துவது இன்றியமையாதது என்று ஆணையம் மேலும் வலியுறுத்தி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல்வேறு காற்று மாசுபாடு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் களச் செயலாக்கத்தைக் கண்காணிக்கவும், தேவைப்படும் இடங்களில் உரிய நேரத்தில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆய்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.



கருத்துகள்